ஆதிசங்கரருக்கு ஒருமுறை உடலை வருத்தும் நோய் உண்டானது. கர்நாடக மாநிலம், கோகர்ணம் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனின் ஆணைப்படி, ஜயந்திபுரம் எனும் திருச்செந்தூரை அடைந்து கடலில் நீராடி, செந்தில் ஆண்டவனை தரிசித்து மனமுருகி வேண்டினார் ஆதிசங்கரர். அப்போது, கருவறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று முருகப்பெருமானை அடைந்தது. அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, அங்கேயே மடைதிறந்த வெள்ளம்போல், ‘சுப்ரமணிய புஜங்கம்’ எனும் புஜங்க விருத்தப் பாடலைகளை இயற்றினார் ஆதிசங்கரர்.

 

                           

                                                                     (tiruchendur west kopura vasal)

புஜங்கம் என்றால் பாம்பு, பாம்பு ஊர்ந்து செல்வதைப் போன்று சொற்றொடர்களை அமைத்து இந்த ஞானப்பொக்கிஷத்தை அருளினார் ஆதிசங்கரர். பல்வேறு நோய்களையும் தீவினைகளையும் அகற்றும் சுப்ரமணிய புஜங்கப் பாடல்கள் மகத்துவம் மிகுந்தவை. அதே போல், தனது நோயை தணித்துக்கொள்ள பன்னீர் இலை விபூதியையும் அணிந்துகொண்டார் ஆதிசங்கரர்.

                                 

                                                                                               (athi sankarar)

மேலும், தனது 25 ஆவது பாடலில் இலை விபூதியின் பெருமைகளை ஆதிசங்கரர் பாடி மகிழ்ந்தார். பன்னீர் இலையில் 12 நரம்புகள் இருக்கும். அவை முருகனின் பன்னிரு கரங்கள் என்று போற்றுகிறார். முருகப்பெருமானை வழிபட்ட தேவர்கள் இத்தலத்தில் பன்னீர் மரங்களாகவே நிலைபெற்று வாழ்வதாகவும் அதனால் செந்தூரின் ‘பன்னீர் இலை விபூதி’ பிரசாதம் மிகச் சிறப்பானது என்றும் அவர் வழிகாட்டுகிறார்.

                                   

 

வேறெங்கும் இல்லாத வகையில், செந்தூரில் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின்போது ஸ்வாமியின் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, இலை விபூதி வழங்கப்படும். சாந்த குணத்தை அளிக்கும் பன்னீர் இலை விபூதிப் பிரசாதம், மனோவியாதிகளை குணப்படுத்த வல்லது என சித்த நூல்கள் கூறுகின்றன. 

                                   

 

ஆன்மீகத் தலங்கள் ஒவ்வொன்றிலும் அங்கு தரப்படும் பலவித பிரசாதங்கள் புகழ் பெற்றது. அந்த வகையில் தமிழ் கடவுளான  முருகப்பெருமானின் அறு படை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு அடுத்து இங்கு பிரசாதமாக வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியால்  புகழ் பெற்றது.    முருகனின் பன்னிரு கரங்களைப் போல  இம்மரத்தின் இலைகளிலும் பன்னிரெண்டு நரம்புகள் இருப்பதால் முருகனின் திருக்கரங்களாலேயே இவ்விபூதி வழங்கப்படுவதாக  ஐதீகம்.  முருகனின் வேல் போல தோன்றும் இவ்விலை பிரசாதத்தை வீட்டில் செல்வம் போல பக்தர்கள் பத்திரப்படுத்தி வைப்பதால்  இந்த விபூதி பன்னீர் செல்வம் என்றும் கூறப்படுகின்றது.

                                 

                                                                    (panner leaf -thiruneer pkg)

சாந்த குணம் நிறைந்த இந்த பன்னீர் இலையில் உள்ள மருத்துவ குணங்களினாலும் முருகனின் அருளினாலும் குன்மம், வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரழிவு போன்ற நோய்கள் தீரும் என்று நம்பப்படுகிறது.                             

     

 

முருகன் புகழ் கூறிடும் வேதங்களே திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில்  பன்னீர் மரங்களாக வளர்ந்துள்ளன என்கின்றனர். இக்கோயிலில்  வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி கொடுப்பதற்காக இங்குள்ள அக்ரஹாரா தெரு முதல் உடன்குடி பகுதி வரையிலும் பன்னீர் மரங்கள் பக்தியுடன் மக்களால் வளர்க்கப்பட்டு வருகின்றது. திருப்பதிக்கு இணையாக சீர் படுத்தப்பட்டு வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும்  பக்தர்களுக்கு  சண்முக அர்ச்னையின் போது  நைவேத்தியமாக படைக்கப்படும் புட்டமிர்தமும் பன்னீர் இலை விபூதியும்  பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த பன்னீர் இலை பிரசாதங்கள் அனைத்தும் பணம் படைத்த பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், சாதாரண பக்தர்களுக்கு பன்னீர் இலை பிரசாதங்களை வழங்குவதில் பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை வைக்கப்படுகின்றன. இதனால் திருச்சந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பன்னீர் இலை பிரசாதங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.