நெல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான அழகோடு மனதிற்கு குளிர்ச்சி தரும் நீர் வீழ்ச்சிகள் அமைந்துள்ளது. பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆண்டு தோறும் வற்றாத நதியாக பாய்ந்து வருகிறது. குறிப்பாக நெல்லையில் அகஸ்தியர் நீர் வீழ்ச்சியும், தென்காசியில் குற்றாலம் நீர் வீழ்ச்சியும் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் முக்கியமான சுற்றுலா தலங்களாக விளங்குகிறது. இங்கு மாவட்டம் கடந்து மட்டுமின்றி பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். 




திருநெல்வேலியில் இருந்து 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அகஸ்தியர் நீர் வீழ்ச்சி உள்ளது, மிகக் மிகக் குறைந்த செலவில் தங்கள் குடும்பங்களோடு வந்து செல்ல கூடிய ஓர் இடம் இந்த நீர் வீழ்ச்சி தான்.  அரிய மூலிகைகள் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் இந்த நீரில் குளித்தால் உடலில் உள்ள  நோய்கள் நீங்கி உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும் என்பதும், அதே போல பாபநாசம் அருவியில் குளித்தால்  பாவங்களில் இருந்து விடுபடும் முக்கிய யாத்ரீக தலமாக அமைந்துள்ளது என்பதும் மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது. 




கொரோனாவால் பொலிவிழந்த நீர் வீழ்ச்சி: கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.    அதன் பின்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு  சுற்றுலா பயணிகள் செல்ல துவங்கினர்.  ஆனால் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலமான நீர்வீழ்ச்சிகளுக்கு மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி என்பது மறுக்கப்பட்டு இருந்தது. மன இறுக்கத்தில் இருக்கும் மக்களுக்கு மாவட்டத்தில் ஒரே ஆறுதல் என்பது இந்த இயற்கையான நீர் வீழ்ச்சிகள் தான். ஆனால் அனுமதி வழங்கப்படாதது என்பது சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை மட்டுமே அளித்தது. வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில்  வருபவர்களுக்கு நீர் வீழ்ச்சிகளில்  அனுமதியில்லை என தெரிந்தததும் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்லும் சூழலிருந்ததது. இந்த சூழலில்  தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளுக்கு செல்ல வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நேற்று அறிவிப்பு வெளியானது. இது வியாபாரிகள், பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,  




ஆனால் அகஸ்தியர் நீர்வீழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படாதது என்பது புரியாத புதிராகவே உள்ளது. மற்ற மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி அளித்த நிலையில் அகஸ்தியர் அருவிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படாத காரணம் தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.




 
வாழ்வாதாரம் இழந்த வியாபாரிகள் &  ஆட்டோ ஓட்டுநர்கள்:


இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரிடம் நாம் பேசும் பொழுது, அகஸ்தியர் அருவி பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே அவர்களது வியாபாரமும், வாழ்வாதாரமும் இருந்து வந்தது. அதுமட்டுமின்றி சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பியே ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்தோம். இதன் மூலம் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால்  அங்கு கடை நடத்தி வந்தவர்களும்,  ஆட்டோ ஓட்டுபவர்களும் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம், ஆட்டோவிற்கு வாங்கிய லோனை கட்ட முடியாமல் ஒரு சிலரின் ஆட்டோவை எடுத்து சென்று விட்டனர். தற்போது நானும் ஆட்டோவை வீட்டில் விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டேன். இப்படி பலரின் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது, மற்ற மாவட்டங்களில் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் இங்கு மட்டும் அனுமதி கொடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும் குற்றாலம் அருவிக்கு அனுமதி அளித்தது போல் அகஸ்தியர் அருவிக்கும் அனுமதி அளிக்க வேண்டும், இதன் மூலம் என்னை போன்ற பலரின் வாழ்வும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்.




இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, தமிழக அரசுத் தரப்பிலிருந்து தகவல் தெரிவித்தவுடன் தான் அதிகாரியாக நாங்கள் முடிவெடுக்க முடியும், தற்போது வரை அரசு தரப்பில் அகத்தியர் அருவி திறப்பு சம்பந்தமாக ஆர்டர் வரவில்லை என தெரிவித்தார்.  கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அகஸ்தியர்  அருவிக்கு செல்ல அனுமதி என்று அரசு தரப்பிலிருந்து கூறும் ஒற்றை வார்த்தையே சற்று ஆறுதல் தரும் செய்தியாக அமையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.