ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்தூர் முருகனின் சூரசம்ஹாரம் விழா  நடந்தது. லட்சக்கணக்கானோர் அரோகரா கோஷங்களை எழுப்பினர். 




முருகப்பெருமானின் அறுபடை வீடுளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா கடந்த 25ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தது. தினமும் காலை சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளியதும் யாகவேள்வி நடந்தது. அங்கு பூர்ணாகுதி திபாராதனை முடிந்ததும் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை நடந்ததும் யாகசாலையில் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் எழுந்திருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில்  சுவாமி, அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன் தங்கதேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வந்து கோயிலை சேர்ந்தனர்.




சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 1:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. காலை 6.30 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்மன் அபிஷேக அலங்காரம் நடந்தது. பகல் 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார். மதியம் 1:30 மணிக்கே சிவன் கோயிலிருந்து சூரபத்மன் புறப்பட்டு பிற்பகல் 3:15 மணிக்கு கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ராகுகாலம் என்பதால் சம்ஹார நிகழ்ச்சி முன்னதாக துவங்கியது.




கோயில் கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் முருகப்பெருமான் சூரனுடன் போரிடும் சூரசம்ஹார விழா நடந்தது. முதலில் கஜமுக சூரன், ஜெயந்திநாதருடன் போர் புரிந்தான். மூன்றுமுறை சுவாமியை சுற்றி வந்து கஜமுக சூரன் போரிட்டான். சுவாமி ஜெயந்திநாதர் தனது வெற்றிவேலால் கஜமுக சூரனை சரியாக மாலை 4.36 மணிக்கு வீழ்த்தினார். தொடர்ந்து சிங்கமுகத்துடன் சுவாமி ஜெயந்திநாதருடன் போரிட்டான். சரியாக மாலை 4.53 மணிக்கு தனது வெற்றி வேலால் முருகன்பெருமான் வீழ்த்தினார். பின்னர் சுயரூபமான சூரபத்மன் சுவாமி ஜெயந்திநாதருடன் போர் புரிந்தான் மூன்று முறை சுற்றி வந்த ஆணவகார சூரனை மாலை சரியாக  5.09 மணிக்கு தனது வெற்றி வேலால்  சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின்னர் சேவலாகவும், மாமரமாக மாறி சூரன் போரிட்டான் கருணை கடவுளான செந்திலாண்டவர் சேவலையும் மாமரத்தையும் ஆட்கொண்டார்.




இந்கழ்ச்சியின் போது கடற்கரையில் குவிந்த லட்சக்கணக்கான முருகபக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்திகோஷம் முழங்கினர்.  
தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வெற்றி முகத்துடன் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் கோயிலை வந்து சேர்ந்தனர். அங்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து விரதமிருந்த முருகபக்தர்கள் கடலில் நீராடி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.




கந்த சஷ்டி விழாவில் 7ம் நாளான 31ம் தேதி அதிகாலை தெய்வானை தபசு காட்சிக்கு புறப்பட்டு முருக மண்டபத்தை சேருகிறார். பிற்பகல் சுவாமி குமரவிடங்கபெருமான் தெப்பகுளம் அருகே உள்ள முருகாமடத்தில் உள்ள தெய்வானைக்கு காட்சி கொடுக்கிறார். மாலையில்  சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.