ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக விசாரணை நடத்த சாதாரண உடையில் வந்த டெல்லி காவல்துறையினருக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சாதாரண உடையில் சென்ற டெல்லி போலீசாரை உள்ளூர் காவல்துறையினர் பிடித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏமன் நாட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் மணிகண்டன் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏமன் நாட்டு காவல்துறையினர் மணிகண்டனை 5 நாட்கள் காவலில் வைத்து மீண்டும் டெல்லி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அறந்தாங்கியை சேர்ந்த ரசாக் என்பவரிடம் 90,000 ரூபாய் கொடுத்து போலி விசா எடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் உடனடியாக அறந்தாங்கிக்கு சென்று ராசக்கை கைது செய்து விசாரித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த போலி விசா எடுத்ததில் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த பக்ருதீன் என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்த நிலையில் டெல்லி போலீஸ் 3 பேர் ராமநாதபுரம் கீழக்கரைக்கு சென்றுள்ளனர்.



அப்போது கீழக்கரை உணவகத்தில் காவல்துறையினர் பக்ருதீன் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாதாரண உடை அணிந்து இருந்ததால், போலீஸ் என அறியாமல் உணகவத்தில் இருந்த ஒரு சில நபர்கள் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கீழக்கரை காவல்துறையினர் அந்த 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர்கள் நாங்க டெல்லி போலீஸ் என அடையாள அட்டையை காண்பித்த பின்னரே காவல்துறையினர் என தெரிய வந்துள்ளது. இதற்குப் பின்னர் போலீசார் பக்ருதீன் வீட்டை கண்டுபிடித்து வீட்டு வாசலில் நோட்டீசை ஓட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய காவல்துறையினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் இத்தகைய குழப்பம் ஏற்படுவதாக கீழக்கரை காவல்துறையினர் சார்பில் தெரிவித்தனர்.




மேலும் இது குறித்து கீழக்கரை போலீசாரிடம் நாம் விசாரித்ததில், போலி விசா தயாரித்து ஒருவரை ஓமன் நாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக கீழக்கரையை சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் வந்துள்ளனர். ஆனால் கீழக்கரையில் நபீல் என்பவரை பக்ரூதீன் என தவறாக நினைத்து அவரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர் டெல்லி காவல்துறையினர். சீருடையில் இல்லாமால் சாதாரண உடுப்பில் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் மீது நபீலுக்கு சந்தேகம் வரவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நபீலின் செல்போனை காவல்துறையினர் பறித்ததையடுத்து கைக்கலப்பு ஏற்பட்டிருக்கிறது. நபீல் தாக்கப்படுவதை பார்த்து உள்ளூர் இளைஞர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதன் பின்னரே எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  நாங்கள் அங்கு சென்று   இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று  உள்ளூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துவிட்டு, விசாரணைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் போலீசார் உள்ளூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் இது போன்ற குழப்பங்கள் நடைபெறாது என டெல்லி போலீசாருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம் என தெரிவித்தனர்.  




'டெல்லிக்கு ராஜான்னாலும் பள்ளிக்கு பிள்ளைதான' என பெரியவங்க சும்மாவா சொல்லி வச்சாங்க' டெல்லி போலீசா இருந்தாலும் சரி இன்டர்நேஷனல் போலீசா இருந்தாலும் சரி எந்த விசாரணையா இருந்தாலும், உள்ளூர்   போலீசுக்கு தகவல் கொடுத்துட்டு  வந்திருந்தா   இந்த  குழப்பமோ கூச்சலும் வராமல் தடுத்து இருக்கலாம் என உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.