நெல்லை டவுண் சாப்டர் பள்ளியில் கடந்த 17 ஆம் தேதி கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் 18 குழுக்கள் அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் கட்டிடங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார். மேலும்  விபத்து நடந்த சாப்டர் பள்ளிக்கு கடந்த ஜனவரி மாதம் தீயணைப்புத் துறை சார்பில் கொடுக்கப்பட்ட சான்றிதழ் மற்றும் 2019ஆம் வருடம் பள்ளி கட்டிடத்திற்கான  உறுதித் தன்மை குறித்து வட்டாட்சியர் வழங்கிய சான்றிதழ் மற்றும் பள்ளி நடத்துவதற்கு அனைத்து வகைகளிலும் கொடுக்கப்பட்ட சான்றிதழின் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் வழங்கியிருந்தார். பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட சான்றிதழின் உண்மை தன்மை குறித்த விசாரணையை தொடங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டு இருந்தார். 




மேலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில்  சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக ஒரு குழு ஒன்றையும் அமைத்தார். இந்த குழுவின் தலைவராக வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் செயல்படுவார் என தெரிவித்திருந்தார். தவறு செய்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க இந்த விசாரணை உதவும் என தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் இன்று வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகரிடம் தனது விசாரணையை தொடங்கி உள்ளார்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி சாப்டர் பள்ளிக்காக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தையும் வருவாய் கோட்டாட்சியர் சந்திர சேகரிடம் இன்று நேரில் சமர்பித்தார். 




இந்த ஆவணங்களை கொண்டு சான்றிதழ் வழங்கப்பட்ட நேரங்களில் எந்த அதிகாரிகள் பொறுப்பில் இருந்தார்கள்?  எந்த அடிப்படையில்  சான்றிதழ்கள் வழங்கினார்கள்? உண்மையில் கட்டிடங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா?  என்பது குறித்த விசாரணையை தற்போது வருவாய் கோட்டாட்சியர் சந்திரசேகர் தொடங்கியிருக்கிறார். வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்  ஆட்சியரிடம் சமர்பிக்கப்படும் தகவல்களின்  அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அடுத்தகட்ட  நடவடிக்கை இருக்கும் என சொல்லப்படுகின்றது.




மேலும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் 3 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தற்போது சாப்டர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெர்சிஸ் ஞானசெல்வி மற்றும் 3 உடற்கல்வி ஆசிரியரான சுதாகர் டேவிட், அருள் டைட்டஸ், ஜேசு ராஜ் ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.