தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம் - போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.


தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து நாகர்கோவில் நகரப் பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் கடை வீதிகளுக்கு வந்து செல்கிறார்கள். இதனால் வடசேரி பேருந்து நிலையம், மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. 


திருட்டு சம்பவங்கள்


கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் மப்டி உடைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.




அண்ணா பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. பண்டிகை காலமான தற்பொழுது கூட்டம் அலைமோதி வரும் நிலையில் அங்கு காவலரை நியமனம் செய்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 


பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்:


எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக அண்ணா  பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை திறந்து அங்கு கூடுதல் காவலர்களை நியமனம் செய்து பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சுமார் 8 கேமிராக்கள் பஸ் நிலையத்தில் உள்ளது. இதில் ஒரு கேமரா கூட செயல் படாமல் பழுதடைந்து உள்ளது. எனவே பழுதடைந்துள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புற காவல் நிலையம் திறப்பதுடன் சி.சி.டி.வி. கேமிராக்கள் சரி செய்யும் பட்சத்தில் குற்ற சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. 


இதே போல் வடசேரி பஸ் நிலையத்தில் தற்போது புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தையொட்டி அங்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்து, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவதுடன் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியையும் அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


மேலும் கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே அந்த பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பழைய கொள்ளையர்கள் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்த படங்களை அறிவிப்பு பலகையாக பொது இடங்களில் வைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உஷாராக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.