கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நெல்லை மாவட்டம் காவல் கிறில் பணகுடி காவல் ஆய்வாளர் அஜிகுமார் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அக்காரை பிடித்து அதிலிருந்தவர்களை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த ஜேக்கப் மகன் தாம்சன் (33), தூத்துக்குடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் கற்குவேல் ஐயனார் (27), கலந்தபனையை சேர்ந்த ஜேக்கப் மகன் அலெக்ஸ் பிரபாகரன் (35) எனத் தெரிய வந்தது.
பின்னர் காரை சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டதில் அதில் இருந்த அட்டை பெட்டியால் மூவரும் சிக்கினர். விசாரணையில் கற்குவேல் ஐயனாரின் நண்பரான சென்னையை சேர்ந்த தொழிலதிபர் இம்ரான்ஷா என்பவரிடம் ரூ. 2 கோடி மதிப்புள்ள கொகையின் எனும் போதைப் பொருளை கடத்தி தருவதாக ஆசை வார்த்தைகளை மூவரும் கூறியுள்ளனர். அதனை நம்பிய தொழிலதிபர் அட்வான்ஸாக ரூ.10 லட்சத்தினை கற்குவேல் ஐயனார் மூலம் கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் மீதிப்பணம் தொழிலதிபரிடமிருந்து வராததால் அதனை அவரிடமிருந்து எப்படி வாங்குவது என திட்டம் தீட்டி உள்ளனர்.
அதன்படி மூவரும் கற்குவேல்ஐயனாரை கடத்தி வைத்திருப்பதாக நாடகமாடி வீடியோ ஒன்றினை எடுத்து மற்ற இருவரும் அவருக்கு அனுப்பியுள்ளனர். அதனை உண்மையென நம்பிய தொழிலதிபர் மீதிப் பணத்தினை தருவதாக போனில் கூறியுள்ளார். அதன்பின்னர் மூவரும் காரில் ஒரு அட்டைப்பெட்டி பார்சலுடன் சென்னைக்கு செல்ல கிளம்பியுள்ளனர். இந்நிலையில் தான் பணகுடி காவல் ஆய்வாளர் அஜிகுமார் காரினை சோதனை செய்த போது அதில் உப்பு பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப்பெட்டியினை பார்த்து சந்தேகமடைந்த அவர் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்ததால் மாட்டி கொண்டதும், கொகையின் போதைப்பொருள் எனக்கூறி அவற்றை தொழிலதிபரிடம் கொண்டு சேர்க்க சென்றதும் தெரிய வந்தது. உடனடியாக 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் சென்னை தொழிலதிபரிடம் கைவரிசையை காட்டிய 3 வாலிபர்களில் காவல்துறையிடம் வசமாக சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்