பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது வஉசி மைதானம். நெல்லை மாநகராட்சி உதயமாகும் முன் பாளையங்கோட்டை நகராட்சியில் இருந்த இந்த மைதானம் கடந்த 12.1.1965-ல் சென்னை மாநில ஸ்தலஸ்தாபன அமைச்சராக இருந்த எஸ்.எம்.ஏ. மஜீத் என்பவரால் திறந்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது பாளையங்கோட்டை நகராட்சி தலைவராக எம்.எஸ். மகாராஜபிள்ளையும், ஆணையராக டி. கோவிந்தராஜனும், பொறியாளராக சி. முத்துக்குமாரசாமியும், ஒப்பந்தக்காரராக எம். சுடலைமுத்து மூப்பனாரும் இருந்துள்ளனர். இது தொடர்பான கல்வெட்டு இம்மைதானத்தில் இருக்கிறது. இம்மைதானத்தில் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காலரிகள் அமைக்க கடந்த 15.8.1965-ல் இந்தியா பிரான்ஸ் இன்டர்நேஷனல் ஹாக்கி விளையாட்டு கமிட்டி நன்கொடை அளித்திருந்தது.


இந்த சூழலில் பழமைவாய்ந்த இந்த மைதானத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைப்பு செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு ரூ.14.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. மாவட்டத்தின் பிரதான மைதானமாக திகழும் இங்கு விளையாட்டு போட்டிகள் மட்டும் இல்லாமல் சுதந்திர தின மற்றும் குடியரசு தின நிகழ்ச்சிகள் புத்தக கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் சுமார் 14.95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த மைதானத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கியது. குறிப்பாக பார்வையாளர் மாடத்தில் ( கேலரி ) புதிதாக மேற்கூரைகள் அமைக்கப்பட்டன. பணிகள் முடிவு பெற்று கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று அரை மணி நேரம் பெய்த மழைக்கு வ.உ.சி மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை ஒன்று அடியோடு பெயர்ந்து விழுந்தது. மழையின் போது வீசிய காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மேற்கூரை சாய்ந்து விழுந்தது. 14.95 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட கேலரியின் மேற்கூரை 7 மாதங்கள் கூட தாக்குப் பிடிக்காமல் சாய்ந்து விழுந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.


மேலும் ஒப்பந்ததாரர்  மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நடைபெற்றதாக பலர் சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வ உ சி மைதானத்தில் சென்னையிலிருந்து வந்த அண்ணா பல்கலைக்கழக வல்லுனர் குழுவினர் ஆய்வு செய்தனர். நகராட்சி நிர்வாக துறையின் தலைமை பொறியாளர் பாண்டுரங்கன் தலைமையில் வந்த அதிகாரிகள் மைதானத்தில் கேலரி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக மீதமுள்ள அனைத்து மேற்கூரைகளும் உறுதி தன்மையுடன் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர் ஆய்வின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆய்வின்போது கேலரிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரின் பொறியாளர்களும் உடன் இருந்தனர். இதற்கிடையில் குறுகிய காலத்தில் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளதால் அதை சீரமைப்பதற்கான முழு செலவையும் ஒப்பந்தக்காரர்கள் ஏற்க வேண்டும் என நெல்லை மாநகர ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஒப்பந்தக்காரருக்கு நோட்டீஸ் வினியோகம் செய்துள்ளார். மேலும் கூரை விழுந்ததற்கான காரணங்களை அதன் அறிக்கையாக ஏழு நாட்களுக்குள் சமர்ப்பித்து நிபுணர் குழுவிடம் ஆஜராக வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண