கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட மாணவிகள் 26 பேருக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1300க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு மதிய உணவு பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது. அதில் சோறு, பருப்பு குழம்பு மற்றும் முட்டை பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 6,7 மற்றும் 8ம் வகுப்பை சேர்ந்த மாணவிகள் சிலர் மயக்கம் அடைந்து விழுந்துள்ளனர். இதனால் பரபரப்பான நிலையில் இத்தகவல் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் மயக்கம் அடைந்த 26 மாணவிகள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மீதமுள்ள மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அசௌகரியமாக காணப்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி செய்யப்பட்டது. தொடர்ந்து பள்ளியில் மாணவிகள் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் உள்ள மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் , தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளட்டோர் நேரில் சந்தித்தனர்.

 



 

சுமார் 180 மாணவிகளுக்கு உணவு சமைக்கபட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த சத்துணவை சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பள்ளியில் ஏராளமான பெற்றோர்கள் திரண்டு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 



 

சத்துணவு சமைக்கும் சமையலறை பூட்டப்பட்டு இருந்ததால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளே சென்று ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், பள்ளியில் தயார் செய்யப்பட்ட சத்துணவில் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டதன் காரணத்தினால் மாணவிகளுக்கு லேசான வயிறு வலி மற்றும் வாந்தி வந்துள்ளது. அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக செய்யப்பட்டதால் எந்த மாணவிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் சத்துணவு தயாரித்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் நிச்சயமாக அரசு மிக கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்கும் எனவும் பெற்றோர்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். சிறிய அளவில் இந்த பிரச்னை வந்திருந்தாலும் கூட அரசுத்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவிகளுக்கு தேவையான உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.