நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2 ம் தேதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து நெல்லை மாவட்ட போலீசார் 9 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறார்கள். நான்கு நாட்களாக நடைபெறும் தொடர் விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து சரியான முடிவு எடுக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறி வந்த நிலையில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கொலை செய்யப்பட்டிக்கலாம் என தெரிய வந்தது. அதனடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஜெயக்குமார் எழுதிய இரண்டு கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரான தங்கபாலுவுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக தங்கபாலு இன்று நெல்லை வந்தார்.
வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து களக்காடு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் தங்கபாலுவிடம் விசாரணை நடத்தினர். குறிப்பாக ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் தங்கபாலு கூறியதன் பேரில் தேர்தலில் 11 லட்சம் செலவு செய்தேன். அந்த பணத்தை எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் வாங்கிக் கொள்ளும்படி தங்கபாலு கூறினார். ஆனால் ரூபி மனோகரன் பணம் தரவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் உண்மையாகவே ஜெயக்குமாரை தேர்தலில் செலவு செய்ய சொன்னீர்களா? தேர்தல் நேரத்தில் உங்கள் இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் நடைபெற்றதா என போலீசார் தங்க பாலுவிடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. விசாரணைக்கு பிறகு தங்கபாலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காவல்துறை கேட்ட கேள்விக்கு சரியான பதிலை அளித்துள்ளேன். ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் எனக்கு பணம் கொடுத்தார் என்றும், அந்தப் பணத்தை சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் பெற்று கொள்ளும்படி கூறியதாக அவர் எழுதி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யானது உண்மைக்கு புறம்பானது. எல்லோருக்கும் தெரியும் தேர்தல் காலத்தில் கட்சி தலைமை அல்லது வேட்பாளர்கள் தான் எல்லா செயல்பாடுகளையும் உதவிகளையும் தேவையான நடைமுறைகளையும் செய்வார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல எல்லா கட்சிக்கும் பொருந்தும். தமிழக அரசியலில் கடந்த 54 ஆண்டுகளை கடந்திருக்கிறேன். இதுவரை யாரும் என்னிடத்தில் பணம் கொடுத்ததாக நான் வாங்கிக் கொண்டதாக எந்த குற்றச்சாட்டும் என்மீது இல்லை. பணம் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பணம் சம்பந்தமான விவகாரங்களை நான் கவனிக்கவும் இல்லை. தேர்தலில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய பணி என்னுடைய பணியாக இருந்தது. அதை நான் சிறப்பாக செய்தேன். தேர்தல் பணிகளை பற்றி நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி வெளியில் பேச முடியாது. இந்த மரணம் துரதிஷ்டவசமானது. ஆனால் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் என்னைப் பற்றிய செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. அதை நான் மறுக்கிறேன். அதற்கான எந்த ஆதாரத்தையும் யாரும் காட்ட முடியாது என்பதையும் அழுத்தமாக கூறிக் கொள்கிறேன். நானே எனது வாக்குமூலத்தை கடிதமாக எழுதி காவல்துறையிடம் கொடுத்திருக்கிறேன். விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் காவல் ஆய்வாளர் என்னை தொடர்பு கொண்டு விசாரணைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், அவருடைய வேண்டுகோள் ஏற்று எனது கடமையை நான் நிறைவேற்றி இருக்கிறேன். மீண்டும் விசாரணைக்கு அழைப்பது குறித்து காவல்துறை என்னிடம் எதுவும் கூறவில்லை. எப்போது விசாரணை என்றாலும் நான் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன் என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, நான் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவராக இருக்கும்போது நான் தான் ஜெயக்குமாருக்கு மாவட்ட தலைவர் பொறுப்பு வழங்கினேன். அவரே பல இடங்களில் கூறியிருக்கிறார். அவரிடம் பணம் வாங்கி தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டிய சூழல் எனக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ இல்லை. காவல்துறை அழைப்பாணை ஏற்று இன்று வந்திருக்கிறேன். காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நேரில் வந்திருக்கிறேன். காவல்துறை பொறுத்தவரை சிறப்பான முறையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடியும் வரை இந்த வழக்கை பொறுத்தவரை அனைவரும் பொறுமையாக இருக்க தான் வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும். தேர்தலில் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டது தொடர்பாக கேட்ட கேள்விக்கு, எதிர்க்கட்சியாக இருந்தால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். தேர்தல் நேர்மையாக நடந்திருக்கிறது. தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை. உயிரிழந்த ஜெயக்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.