தூத்துக்குடி மாநகராட்சியில் 2023-2024-ம் ஆண்டுக்கான ரூ.10.44 கோடி உபரி வருவாய் பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்.




தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 2023- 2024-ம் நிதியாண்டுக்கான உத்தேச வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சியில் 2023- 2024-ம் நிதியாண்டில் வருவாய் நிதியில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ.31.64 கோடி, அரசு சுழல் நிதியாக ரூ.6.90 கோடி, அரசு மானியமாக ரூ.84 கோடி, ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.25.61 கோடி என மொத்தம் ரூ.148.15 கோடி வருவாய் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சாலை, கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு செலவினங்களுக்காக ரூ.8.16 கோடி, இயக்க செலவினங்களு்காக ரூ.47.33 கோடி, சம்பளம், ஓய்வூதியம் தொடர்பான செலவினங்களுக்காக ரூ.67.75 கோடி நிர்வாகம் மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.23.79 கோடி என மொத்தம் ரூ.147.02 கோடி செலவாகும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.1.13 கோடி உபரி வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.57.97 கோடி வருமானம் வரும் எனவும், ரூ.50.42 கோடி செலவாகலாம் எனவும், இதன் மூலம் ரூ.7.55 கோடி உபரி வருவாய் வரும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்வி நிதியில் ரூ.5.62 கோடி வருமானம் வரும் எனவும், 3.86 கோடி செலவாகும் எனவும், இதன் மூலம் ரூ.1.76 கோடி உபரி வருமானம் கிடைக்கும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.இவைகள் மூலம் 2023- 2024-ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.211.74 கோடியாக இருக்கும் எனவும், மொத்த செலவினங்கள் ரூ.201.30 கோடியாக இருக்கும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.44 கோடி உபரி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.




தொடர்ந்து சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய மேயர், தூத்துக்குடியை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மரங்கள், செடிகளை வளர்த்து மாநகராட்சியின் முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.




கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடிண்டா,கற்பகக்கனி ஆகிய மூவரும் கறுப்பு உடை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் மூவரும் திடீரென கூட்ட அரங்கின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.