நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பிரதான தொழில் விவசாயம். கடந்த சில ஆண்டுகளாக வறட்சி காரணமாகவும், போதிய மகசூல் இன்றியும், விலை இன்றியும்  லாபம் பெற முடியாமலும் என பல்வேறு காரணங்களால் விவசாயத்தை விட்டு விட்டு பலர் வேறு வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு மாற்றாக நெல்லை மாநகராட்சி மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட தென்பத்து கிராமத்தில் விவசாயம் செய்வதன் நுணுக்கங்களை முறையாக கற்று கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களுமே விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல என நாற்று நடுதல், உரமிடுதல், அறுவடை செய்தல் என அனைத்து வேலைகளையும் பெண்களே தன்னம்பிக்கையுடன் செய்து வருகின்றனர். 



மாநகரத்தின் நடுவே தென்பத்து கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 700 ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கிராமத்தில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என காட்சியளிக்கும் விவசாய நிலத்திற்கு அருகே சிறிதளவு வீடுகள் காணப்படும், இங்கு ஆரம்பத்தில் வீட்டில் உள்ள ஆண்களுடன் சேர்ந்து ஒரு சில பெண்கள் மட்டுமே விவசாயம் பார்த்து வந்தனர். தற்போது வேளாண்மைத் துறை மூலம் விவசாயம் செய்வது, அதிக மகசூல் பெறுவது, இயற்கை முறையில் விவசாயம் செய்வது போன்ற பயிற்சிகளை முறையாக கற்று பயனடைந்ததன் மூலம் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவருமே விவசாயத்தில் இறங்கி உள்ளனர்.. 




விதை நிவர்த்தி செய்து தான் விவசாயம் செய்து வருகிறோம், எங்களது கூட்டுப் பண்ணை மூலம் உரக் கம்பெனி ஆரம்பித்து உள்ளோம், விவசாயியாக இருந்த நாங்கள் தற்போது முதலாளியாக மாறிவிட்டோம், இதில் படிக்காதவர்கள் மட்டுமின்றி படித்த பெண்களும் விரும்பி விவசாயம் செய்து வருகின்றனர்.. படித்து ஒரு வேலைக்கு செல்லும் இடத்தில் அடுத்தவர்களுக்கு வேலை செய்வதை விட நாமே முதலாளியாக இருந்து கொண்டு வேலை செய்வதே பெருமை எனவும்  நல்ல ஒரு வேலையில் உள்ள அதிகாரியின் மகள் என கூறுவதை விட விவசாயியின் மகள் என கூறுவது கூடுதல் பெருமை என கூறுகிறார் பட்டதாரி விவசாயி கலா செல்வி




தென்பத்து கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றியதில் முக்கிய பங்கு இயற்கை விவசாயி மனோன்மணியை சேரும், இவர் எடுத்த முயற்சியினால் இக்கிராமமே விவசாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறது. ஆரம்பத்தில்  விவரம் தெரியாமல் தன் நடுவையாக நட்டதன் பேரில் லாபம் என்பது சொல்ல முடியாத அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போது கற்றுக் கொண்டது போல கயிறு பிடித்து நடுவது, இயற்கை முறையில் உரம் தயாரித்து பயன்படுத்துவது போன்றவற்றை கடைபிடித்து வருவதால் நல்ல பலன் கிடைக்கின்றது.. ஏக்கருக்கு 30 மூட்டை வரை கிடைத்த நிலையில் தற்போது 30 மூட்டையையும் தாண்டி நல்ல மகசூல் கிடைப்பதாகவும், வேளாண்மைத்துறையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாலே இது சாத்தியமானது என  தெரிவிக்கிறார் இயற்கை பெண் விவசாயி மனோன்மணி.


அதே போல் புது ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அதனையும் விளைவித்து பார்க்கலாம் என முற்போக்கு சிந்தனையில் செயல்பட்டு வருபவர் மனோன்மணி, தற்போது அம்பை 21 என்ற வெளிவர உள்ள புதிய ரகத்தை பயிரிட்டு உள்ளார். அம்பை 16 க்கு மாற்று ரகமாக கண்டுபிடிக்கப்பட்டு சந்தைக்கு வராத இந்த ரகம் கொடுக்கும் மகசூலை பொறுத்து அடுத்த பருவத்தில் முழுமையாக பயிரிட உள்ளோம் என தெரிவிக்கிறார்.




தங்களுக்கு தேவையான உரங்களை தாங்களே தயாரித்து வருகிறோம், விரிடி என்ற இந்த ரகத்தை கொரோனாவால் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது, தொடர்ந்து அதனை ஊர்மக்களுடன் இணைந்து விரைவில் தயார் செய்வோம், பி எஸ் இ, பி எட் வரை படித்து உள்ளேன், இந்த படிப்பிற்கு வெளியில் சென்று வேலை பார்த்தால் மன அழுத்தம் பிரசர், சுகர் போன்ற பல்வேறு வியாதிகள் தான் வரும், ஆனால் விவசாயம் பார்ப்பதால் நானே ராஜா நானே மந்திரியாக வாழ்ந்து வருகிறேன், அத்தோடு மன நிம்மதியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது என்கிறார் பட்டதாரி  விவசாயி மஞ்சு.




இவ்வாறு தொழில் நுட்பத்தை படித்ததன் பேரில் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவருமே ஆர்வமுடனும் தன்னம்பிக்கை உடனும் இயற்கை விவசாயம் செய்து வருவதால் தென்பத்து கிராமத்தை விதை கிராமமாக வேளாண்மைத்துறை தேர்வு செய்து உள்ளது. இவ்வளவு திட்டங்கள் அரசு கொடுப்பதன் மூலம் பெண்களாக சேர்ந்து விவசாயத்தை முன்னெடுத்து செல்கின்றனர். பெண்களால் வீடும், சமூகமும், நாடும், உலகும் முன்னேறி வரும் இன்றைய சூழலில் அரசின் முழு ஒத்துழைப்பு கிடைத்தால் எந்த சவாலையும் எதிர்கொள்ளவும், வெற்றிபெறவும் முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இக்கிராம பெண்கள்!!!!!




சுந்தரம் பாட்டியின் பாட்டுகளே இக்கிராம விவசாயிகளின் களைப்பு நீங்க பூஸ்டர் - நீங்களும் கேட்டு மகிழுங்கள், 3 வீடியோக்களும் இதோ


https://twitter.com/RevathiM92/status/1484817176783917061?t=r0cBndCSHJQlYkDIX6FAKg&s=08


https://twitter.com/RevathiM92/status/1484814343984144384?t=jIhGDKD5EDO9UromneWjhg&s=08


https://twitter.com/RevathiM92/status/1484813214512648192?t=J3pI35S-u8KP6XtTv9H3Cg&s=08