வேர்க்கடலை, என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும். தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்ததாக கருதப்படுகிறது. இன்று உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் எண்ணெய் எடுப்பதற்காகவும், உணவுப் பண்டமாகவும் நிலக்கடலை அதிகம் பயன்படுகிறது. இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் இறவையிலும், மானாவாரியிலும் அதிகளவில் பயிரிடுகிறார்கள். குறிப்பாக, தென்மாவட்டங்களில் இறவையை விட மானாவாரியில்தான் அதிக பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த் ஆண்டு நிலக்கடலை அமோகமாக விளைந்துள்ளதால் விவசாயிகள் கடலை பறிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்தாண்டு மாவட்டத்தில் சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், கூரான்கோட்டை, பூப்பாண்டியபுரம், பெரியகுளம், கடுகுசந்தை, சத்திரம், மேலச்செல்வனூர், காவாகுளம், மேலக்கிடாரம் உள்ளிட்ட கடலாடி வட்டாரத்தில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1900 ஏக்கரிலும், நயினார்கோயில் அருகே பாண்டியூர், சேமனூர், பரமக்குடி அருகே அக்ரமேசி, கமுதி அருகே பசும்பொன், மருதகநல்லூர் போன்ற பகுதிகள் உட்பட மாவட்டத்தில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத கடைசியில் துவங்கியது. இதனால் 105 நாட்களில் மகசூல் தரக்கூடிய தரணி, கோ 7 ரகம் மற்றும் நாட்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு தொடர்ந்து சீரான தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் நிலக்கடலை பயிர்கள் நன்றாக வளர்ந்தது. தற்போது வேர்கடலை நன்றாக விளைந்த நிலையில் விவசாயிகள் பறித்து விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், காலம் கடந்து பருவமழை பெய்ததால் சில இடங்களில் மட்டும் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் கடந்த சில வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு நிலக்கடலை விளைச்சல் நன்றாக வந்துள்ளது. இதனால் ஒரு கிலோ கடலை ரூ.70 முதல் 80 வரை விலை போகிறது. பறிப்பதற்கு கூலியாக 5 முதல் 8 கிலோ வரையிலான நிலக்கடலை வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நிலக்கடலை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.