கோவை உக்கடம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பான வழக்கை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்ததை தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பல்வேறு இடங்களில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை  மேலப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த இஸ்லாமிய பிரச்சார இயக்க நிர்வாகி முகமது உசேன் மண்பேயிடம் நெல்லை காவல்துறையினர் சுமார் 3 மணி நேரமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.




விசாரணை முடிவு பெற்ற நிலையில் அவரது வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் தேவைப்படும் பட்சத்தில் அடுத்த கட்ட விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறையினர் முகமது உசேன் மண்பேயிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.  தொடர்ந்து அங்கு  குவிக்கப்பட்ட காவல்துறையினரும் திரும்ப பெறப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும்  மாநகர காவல் துறை ஆணையர் அபினேஷ் குமார் உத்தரவின் பேரில்  மேலப்பாளையம் பகுதியில் நான்கு வீடுகளில் பல்வேறு குழுக்களாக காவல்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக மேலப்பாளையம் காதர் மூப்பன் தெருவை சார்ந்த சாஹிப் முகமது அலி(35), சையது முகமது புகாரி(36), முகமது அலி(38), முகமது இப்ராஹிம்(37) ஆகிய 4 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக   முகமது அலி,  ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்ததாகவும், அது தொடர்பாக முகமது அலி உள்ளிட்ட  நான்கு பேர் வீடுகளில் ஏற்கனவே தேசிய புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டு இருந்தனர்.  




இந்நிலையில் மீண்டும் மேலப்பாளையத்தில் உள்ள நான்கு பேர் வீடுகளிலும், தனித்தனியாக  கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில்  நான்கு பேரின்  செல்போன் மற்றும் குடும்பத்தினர் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அந்த செல்போனில் உள்ள எண்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்து கொண்டனர். மேலும்  இவர்கள் யாருடன் பேசினார்கள்? என்ன பேசினார்கள் என்பது குறித்தும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேர் வீடுகளிலும் சுமார் 4 மணிநேரம் சோதனை நடைபெற்றது. சோதனையில் எதுவும் சிக்காத நிலையில் திரும்பி சென்றனர். இந்த சோதனையின் காரணமாக மேலப்பாளையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.











மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண