உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் மாநகர சபை, நகர சபை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி , ஊராட்சி என 601 இடங்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை அன்பு நகர் 40- வது வார்டு பகுதியில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
 


அப்போது நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், ”தமிழகம் முழுவதும் இன்று முக்கியமான நாளாகும். வருடத்திற்கு ஐந்து முறை மட்டுமே கிராம சபை கூட்டம் நடக்கும். ஆனால் தமிழக முதல்வர் மாநகரப் பகுதி மக்களும் தங்கள் குறை நிறைகளை தெரிவிக்கும் வகையில் கூட்டம் நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது வரலாற்றிலேயே முதல் முறையாக மாநகரப் பகுதியில் கூட்டம் நடத்தப்படுகிறது. 2030 க்குள் இந்தியாவிலேயே அதிக அளவு மக்கள் தொகை மாநகராட்சி பகுதியில் இருக்கக்கூடியது என்றால் தமிழகம் தான் முதலிடம் பெறக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் இருக்கக்கூடிய மக்களுக்கு தொலை நோக்கு பார்வையோடு திட்டங்கள் தீட்டப்படும்.  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற புகழ் பெற்ற பாளையங்கோட்டை தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே ஒரு சிறந்த இடத்தை பெற வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விசயம்.  அதன்படி பார்க்கும் பொழுது அடுத்த 30 ஆண்டு காலத்திற்குள் இந்த நகரம் எப்படி வளர வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்..


 




தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள  நெல்லை, பாளையங்கோட்டை மாநகரப் பகுதிக்கு 24 மணிநேரமும் குடி தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதோடு திருநெல்வேலி, பாளையங்கோட்டை மாநகர பகுதி கண்டிப்பாக இந்தியாவிலேயே தூய்மையான நகரமாக மாறவேண்டும். இதற்காகவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 5 வார்டுகள் தேர்வு செய்து பரிசோதனை அடிப்படையில் ஆய்வு செய்ய உள்ளோம்.  நிலத்தடி நீரை பொறுத்தவரை மாநகர பகுதியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளது. இதனை படிப்படியாக  சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பாளையங்கால்வாய், நெல்லை மற்றும் கோடகன் கால்வாய்கள் தூர்வாரி பராமரித்து குப்பைகள் போடாத வண்ணம் உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பல இடங்களில் சாலைகள், நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சிக்கு இணைந்து வருகிறது. இதில் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ளதால் மாநகர் பகுதிக்குள் வரும் சாலை அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவியை பொறுத்தவரையில் விரைவில் நெல்லை மாநகரம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே பாதுகாப்பு மிக்க நகரமாக மாற்றப்படும். அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. நகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து குற்றம் நடைபெறும் இடமே இல்லாத பகுதியாக மாற்றப்படும், மேலும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் அளிக்கும் வகையில் செயலி ஒன்று தொடங்கப்படும்”என தெரிவித்தார்.


முன்னதாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் கூறுகையில், “இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடித்தண்ணீர் கொண்டு வரும் திட்டம் மாவட்ட நிர்வாகம், மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த திட்டம் வந்தால் பாளையங்கோட்டை பகுதியில் பல வார்டுகள் பயன்பெறும். பாதாளசாக்கடை திட்டம் பகுதி-3,  512 கோடியில் விரைவில் வருகிறது. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படும்”என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண