தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 397 பதவிகளுக்கு 1790 வேட்பாளர்கள் களத்தில்  தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இதற்காக வாக்காளர்கள் மத்தியில் ஓட்டு சேகரிக்கும் பணியையும்  வேட்பாளர்கள் தீவிரமாக தொடங்கியுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் எப்போதும்போல் இந்த முறையும் நூதன முறை வாக்கு சேகரிப்பும் ஒரு புறம் நடந்து வருகிறது.


நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளில் 9 வது வார்டுக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாரியம்மாள் அவுலியா என்ற ஆர்த்தி, பெண் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு தாலிக்கயிறு, குங்குமசிமிழ் கொடுத்து வாக்கு சேகரித்ததுடன், பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். மேலும் வீடுகளில் பெண்களிடம் தனக்கு குங்குமம் வைத்து வெற்றி பெற ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.




அதே போல ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக 30வது வார்டு பாஜக வேட்பாளர் மேகநாதன் என்பவர் தனது வார்டுக்குட்பட்ட சிந்துபூந்துறை, மேகலிங்கபுரம், செல்வி அம்மன் கோவில் தெரு, புது அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாமரையை மலரச் செய்யுமாறு கூறி பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று தனது வாக்குகளை சேகரித்து வருகிறார். தொடர்ந்து அங்குள்ள உணவு கடைகளுக்கும் சென்று தனக்கு ஆதரவை திரட்டினார்




அதே போல 30 வது வார்டு திமுக வேட்பாளர் மாரியப்பன் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டங்களை கூறியும், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தும் வெற்றி பெறச் செய்தால் நிச்சயமாக எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என கூறி வீடு வீடாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்.




மேலும் அதே வார்டில் இவர்களை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெகநாதன் என்ற கணேசன் இன்று காலை முதலே தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தனது வார்டு பகுதியான நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். 




நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கட்சி ரீதியாகவும், சுயேச்சையாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு தீவிர பிரச்சாரத்திலும் வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.