தமிழர் திருநாளான  பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரும் வீட்டு முற்றத்தில் புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம், புதுப்பானையில் பொங்கல் இடுவது என்பது தற்போதைய நாகரீக மாற்றத்தால் நகர பகுதிகளில் பலரும் சில்வர், ஈயப் பாத்திரங்களில் விட்டு கொண்டாடுகின்றனர். இதனால் பித்தளை பாத்திரங்களின் தேவை நகர வாழ்க்கையில் குறைந்த அளவே காணப்படுகிறது,  ஆனால் இன்றளவும் நம் முன்னோர்களின் வழிப்படி  கிராமப்புறங்களில் பித்தளை பாத்திரங்களில் பொங்கலிடும் வழக்கம் மாறாத ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக தென் மாவட்டமான  நெல்லை மாவட்டத்தில் பித்தளை பானைகளிலே  மக்கள் பலரும் பொங்கலிட்டு மகிழ்கின்றனர். குறிப்பாக பழைய பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் பித்தளை பாத்திர பட்டறைகள் இன்றளவும் செயல்பட்டு வருகிறது.




ஆனால் கால மாற்றத்தால் அதிக அளவில் இருந்த பட்டறைகள் தற்போது எண்ணி சொல்லும் அளவிற்கு சொற்ப அளவிலே இயங்கி வருகிறது, பட்டறைகள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்ததுமே தீபாவளி வந்தது போன்ற ஒரு உணர்வு நம்முள் எழுகின்றது, பட்டறை தொழிலாளர்கள் கையால் அடித்து பித்தளை பானைகளை தயார் செய்வது டப் டப் என்ற வெடி சத்தம் போல் நமது காதுகளில் ஒலிக்கிறது. நெருங்கி வரும் பொங்கல் பண்டிகைக்கு பித்தளை பானைகள் தயாரிக்கும் பணியும் சூடு பிடித்துள்ளது.




இது குறித்து பட்டறை உரிமையாளர் தமிழ்மணி கூறும் பொழுது, பித்தளை பாத்திரம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் ஈரோடு, திருப்பூரில் இருந்து வாங்கி தயார் செய்கிறோம், ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உற்பத்தி 70% வரை குறைந்து உள்ளது. கொரோனா பாதிப்பு இந்தாண்டு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடைகளில் விற்பனை என்பது குறைந்து விட்டது, அதோடு தற்போது ஒமிக்ரான் அச்சம் இருப்பதால் முன்பணம் வாங்கி தொழில் தொடங்க முடியாத சூழலில் இருக்கிறோம், குறைந்த அளவே ஆர்டர்கள் எடுத்து செய்து கொடுக்கிறோம், ஜிஎஸ்டி உயர்வு, பொருட்களின் கடுமையான விலையேற்றம் காரணமாக பொங்கல் பானைகள் விலை இந்தாண்டு உயர்ந்துள்ளது, இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக போஸ்டர் அடித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என தெரிவித்தார்.. 




அதேபோல மற்றொரு பட்டறை உரிமையாளர் கூறும் பொழுது, தற்போதைய காலத்தில் விலைவாசி என்பது அதிகரித்து உள்ளது. 600 ரூபாயாக இருந்த பித்தளை பாத்திரம் கிலோ 800, 850 வரை விலையேற்றம் கண்டு உள்ளது. கொரோனாவால் பணபுழக்கமும் மக்களிடையே குறைந்து உள்ளதால் தொழிலில் முன்போல் விறுவிறுப்பாக இல்லை,  ஆர்டர்கள் வருகின்றது என்றாலும் அதற்கு தகுந்த வியாபாரம் இல்லை என கூறுகிறார் பரமசிவம், அதே போல தொழிலாலர்களுக்கு கூலியும் கொடுக்க முடியவில்லை, இதனால் இத்தொழிலை விட்டு விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலையே உள்ளது, அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்தினால் தொழிலை ஓரளவிற்கு கொண்டு செல்ல முடியும் எனவும் கூறுகிறார் அவர், 




பட்டறை தொழிலாளி இசக்கி முத்து கூறும் பொழுது, மண்பாண்டத்திற்கு அடுத்தப்படியாக பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது பித்தளை பாத்திரங்கள்தான், எவ்வளவு கஷ்ட பட்டாலும் பெண் பிள்ளைகளுக்கு சீர் வரிசை கொடுப்பதற்கு பித்தளை பாத்திரம் வாங்கி கொடுப்பாங்க, ஒரு பானையாவது பொங்கல் சீர்வரிசையில் இல்லாமல் இருக்காது என கூறுகிறார், 500 பேர் வேலை செய்த இடத்தில் தற்போது 150 பேர் தான். வேலை செய்கிறோம், என்ன தான் மிசினரி வந்தாலும் உடல் உழைப்பு அதிகம் என்பதால் பலரும் இத்தொழிலுக்கு வருவதில்லை என்கிறார், அதோடு நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் அரசு கொடுப்பது போல 58 வயது தாண்டிய அனைவருக்கும் 3 ஆயிரம் ரூபாய் அரசு கொடுத்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறார். 




பட்டறை முதலாளியாக இருந்து தொழிலாளியாக மாறிய வணங்காமுடி கூறும் பொழுது, இந்த தொழிலை பொறுத்தவரை முன்பணம் அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும், இதனாலேயே பட்டறையை நடத்த முடியாமல் தற்போது வேறு ஒருவரிடம் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். அதேபோல் முன்பு ஒரு பானையை முழுமையாக உருவாக்கும் வேலை அனைத்தையும் ஒருவரே பார்ப்பதால் அதற்கேற்ப சம்பளமும் கிடைத்தது, ஆனால் வெல்டிங் வைக்க தனி, கட்டிங் செய்ய மிசினரி என பிரித்து பார்க்கப்படுவதால் தங்களுக்கான கூலி குறைந்து விடுகிறது. பொங்கல் பானையில் பொங்கலிடுவது நமது தமிழ்நாட்டு கலாச்சாரம், அதனாலயே சீர்வரிசையில் இதனை கொடுக்கின்றனர், அதோடு பித்தளை பானைக்குள் பூசப்படும் ஈயம் தற்போது ஆயிரம் ரூபாயில் இருந்து 3500 ரூபாயாக உயர்ந்து விட்டது, ஈயம் பூசுவதால் உடம்பிற்கு தேவையான ஒருவித தாமிர சத்து நமக்கு தருகிறது, ஆனால் சில்வர் பாத்திரங்களில் அவ்வாறு கிடைப்பதில்லை. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் தொழிலை விடக்கூடாது  என்பதற்காக வேலை செய்கிறோம் என்று புன்னகைக்கிறார் வணங்காமுடி




கொரோனா கடந்த இரண்டு ஆண்டுகளாக பலரின் வாழ்வையும் புரட்டி போட்ட சூழலில் தற்போது பரவி வரும் புதுவகை வைரஸ் தங்களை போன்ற சிறு தொழிலாளர்களை மீள விடாமல் மீண்டும் முடக்கி விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர், இதனால் ஏற்பட்டுள்ள கடும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சித்தால் பலரின் வாழ்வு மகிழ்ச்சியில் பொங்கும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Also Read | Chennai Rain News LIVE Tamil: சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: நாளை வரை கனமழை எச்சரிக்கை!