முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் புண்ணிய பூமி திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழா மற்றும் மாசித்திருவிழா என இரண்டு பிரமோற்சவத் திருவிழாக்கள் மிக முக்கிய திருவிழாக்களாகும்.




முன்காலத்தில் இப்பகுதியை ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தான ராஜா, உள்ளூர் மக்களின் தரிசனத்திற்காக நடத்தப்பட்ட மூலத்திருவிழாதான் ஆவணித் திருவிழா. மாசித் திருவிழாவைப்போல ஆவணித் திருவிழாவும் 12 நாள்கள் நடைபெறும். ஆனால், குமரவிடங்கப்பெருமான் பெரியதேரில் வலம்வருதலுக்குப் பதிலாக சிறியதேரில் வலம் வருவார். தெப்ப உற்சவமும் நடைபெறாது. ஆவணித் திருவிழா தேய்பிறை நாள்களிலும், மாசித்திருவிழா வளர்பிறை நாள்களிலும் நடைபெறும். இங்குள்ள சண்முகர், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் அதாவது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் புரியும் பிரம்மா, விஷ்ணு ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பவர். அவரை அந்த வடிவத்திலேயே வழிபடும் அற்புதத் திருவிழாதான் இந்த ஆவணித் திருவிழா.




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு  அதிகாலை 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் கோயிலிலிருந்து கொடிபட்டம் புறப்பட்டு ஒன்பது சந்திகளில் வீதிஉலா வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தது. தொடர்ந்து, கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன. அதிகாலை 5.40 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காப்பு கட்டிய  கொடியேற்றப்பட்டது.





பின்னர் கொடிமர பீடத்துக்கு மஞ்சப்பொடி, மாபொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தானம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. கொடிமர பீடம் தர்ப்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து 7.05 மணிக்கு சோடாச தீபாராதனை நடந்தது. தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 




இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 21-ம் தேதி 5ம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், 23-ம்  தேதி 7-ம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 24-ம் தேதி 8-ம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளன்று  26-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக ஆவணி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் பிரகாரத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு தேரோட்டமும் நடைபெறவில்லை இந்த ஆண்டு ஆவணி திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  திருவிழாவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில்  செய்யப்பட்டுள்ளது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண