கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (44 ). இவருக்கு பிரேமி என்ற மனைவியும், ஜோலின், சிசினோ, ஆரவி என இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 

சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒமான் நாட்டில் அந்நாட்டின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தனியார் உணவகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரேமி தனியார் மருத்துவமனையில் நர்ஸாகவும் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மூன்று குழந்தைகளையும் ஓமன் நாட்டிலேயே படிக்க வைத்துள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காரணமாக இவர்கள் இருவரும் வேலையை இழந்துள்ளனர். இதனால் குடும்பத்துடன் இந்தியா திரும்ப இருந்த சுரேஷ் தான் 19 ஆண்டுகளாக பணிசெய்த நிறுவனத்தில் தனக்கான பண பிடிப்பு ( பி,எப் ) தொகையினை கேட்டுள்ளார். அதை கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது.இதனால் அந்நாட்டின் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 





இதில் அவருக்கு 10 லட்ச ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் கொரோனா உச்ச கால கட்டத்தில் அங்கிருந்து சொந்த நாடு செல்ல குடும்பத்துடன் விமான நிலையம் வந்த அவரை நிறுவனத்தில் நடைபெற்ற வேறு ஒரு வழக்கில் தொடர்பு படுத்தி இந்தியா செல்ல ஓமன் நாட்டு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் தனது மூன்று குழந்தைகளை மட்டும் அழைத்து கொண்டு இந்தியா திரும்பினார் சுரேஷின் மனைவி பிரேமி. 

 

கன்னியாகுமரி வந்த பிரேமி இது குறித்து மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றிற்கு மனு அனுப்பி கணவரை இந்தியா கொண்டுவர முயற்சி செய்துள்ளார். மேலும் வருமானம் இல்லாமல் குடும்ப செலவு மற்றும் வேலை இல்லாமல் வெளிநாட்டில் தவிக்கும் தனது கணவரின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மூன்று குழந்தைகளையும் வயதான தனது மாமியார் பாத்திமா மேரி வசம் ஒப்படைத்து விட்டு சவுதி நாட்டிற்கு நர்ஸ் வேலைக்கு சென்றுள்ளார். 

 



 

75 வயதான பார்வை குறைபாடு உள்ள சுரேஷின் தாய் பாத்திமா மேரி சின்னமுட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பெட்டி கடை நடத்தி தனது பேரக் குழந்தைகளை பராமரித்து வருகிறார். 

 

இந்நிலையில் நிரபராதியான தன்னை இந்தியா கொண்டு வர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை சுரேஷ் வெளியிட்டுள்ளார்.  மேலும், வெளிநாட்டில் தவிக்கும் தங்களது தந்தையை மீட்க வேண்டும் என சுரேஷின் குழந்தைகள் மற்றும் அவரது தாய் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தாய், தந்தை வெவ்வேறு நாட்டிலும் குழந்தைகள் வயதான பாட்டியுடன் சிரமப்படுவதால் அரசு இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.