சமீபத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளான வீடியோ (பொது இடத்தில் பாலியல் தொல்லை) விவகாரத்தில் தொடர்புடைய சசிகலா புஷ்பா, பொன் பால கணபதியும் இணைந்து வந்து ஆறுதல்:
ராமநாதபுரத்தில் பா.ஜ.க ஆதரவாளராக இருந்து வருபவர் டாக்டர் மனோஜ்குமார். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி இவருடைய தனியார் கிளினிக் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு மர்மநபர்கள் மூன்று பேர் தீ வைத்து சென்றனர். இதே போல் தமிழகம் முழுவதும் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து விசாரிக்க பா.ஜ.க சார்பில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதில் ஒரு குழுவினர் ராமநாதபுரத்தில் டாக்டர் மனோஜ் குமார் காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக வந்தனர். அந்த குழுவில் சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான சசிகலா புஷ்பா, பொன் பாலகணபதியும் ஒரு சேர வந்திருந்தது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களுடன் முன்னாள் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ,மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். காருக்கு தீ வைத்த சம்பவம் குறித்து மனோஜ் குமாரிடம் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் தீ வைக்கப்பட்ட காரையும், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுப்புறத்தையும் விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது பா.ஜ.க மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் என்பவருக்கும், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலாராணி என்பவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கலாராணி, ராமகிருஷ்ணனை பார்த்து நாக்கை துருத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் கூச்சலிட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாவட்ட தலைவர் கதிரவன் கூட்டத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் விசாரணை குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பெட்ரோல் குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டிருந்த கட்சியின் ஆதரவாளருக்கு ஆதரவு கூறிவிட்டு ஆய்வு செய்த வந்த இடத்தில் ஆண் நிர்வாகியும் பெண் நிர்வாகியும் மோதிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. நம்ம கட்சியையும் சர்ச்சையும் பிரிக்கவே முடியாதுபோல, என தொண்டர்கள் முணுமுணுத்தவாறே அங்கிருந்து சென்றனர்.
இதனிடையே, குழுவின் தலைவரான எம்.மாணிக்கம் செய்தியாளா்களிடம் பேசுகையில், ”பாஜக, இந்து அமைப்புகளின் நிா்வாகிகள் வீடுகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டது குறித்து ஆய்வு செய்ய மாநில பாஜக தலைமை உத்தரவின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் காந்தி தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 23 ஆம் தேதி மனோஜ்குமாா் மருத்துவமனை முன்பிருந்த காா்களில் தீ பற்றவைக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தக்க நேரத்தில் அதை அணைத்ததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைது செய்வதுடன், அவா்களைத் தூண்டிய அமைப்பையும் தடை செய்யவேண்டியது அவசியம்.
தமிழகத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களை பாஜக வேடிக்கை பாா்த்துக்கொண்டிருக்காது. ராமநாதபுரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்கள் எந்த இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பதை வெளிப்படுத்துவதும் அவசியம். வன்முறையாளா்களுக்கு அரசியல் கட்சியினா் ஆதரவளிப்பது தலைக்குனிவாகும். அவா்களுக்குத் துணை போகிறவா்கள் தமிழக மக்களின் எதிரிகள்” என பேசினார்.