குமரி மாவட்டத்தில் கோவிலுக்கு விரதமிருந்து காதில் கம்மல் காலில் கொலுசு அணிந்து பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவனை வகுப்பறைக்கு அனுமதிக்காததால் ஆத்திரத்துடன் பள்ளி சென்ற பெற்றோரை, விரதம் முக்கியம் என்றாலும் கூட கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிவுரை வழங்கி அவர்களை சமாதானம் செய்து பிரச்சனையை சுமூகமாக கையாண்டுள்ளனர் ஆசிரியர்கள்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மத , ஜாதிய அடையாளங்கள் கொண்ட குறியீடுகளை பயன்படுத்த தடை உள்ளது. மேலும் முறையாக சம்மந்தப்பட்ட பள்ளிகள் உத்தரவின் பேரில் அனுமதிக்கப்பட்ட சீருடை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவு உள்ளது. இதனை கண்காணிக்கவும் நடைமுறைபடுத்தவும் பள்ளி கல்வி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து விதவிதமாக வேடமிட்டு பலரும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடலிவிளை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து காதில் கம்மல் காலில் கொலுசு அணிந்துள்ளார். விரதம் இருப்பதால் பள்ளிக்கும் அதனை கழற்றாமல் அப்படியே சென்றுள்ளார். இந்த நிலையில் பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் அந்த மாணவனிடம் கம்மல் மற்றும் காலில் கிடந்த கொலுசை அகற்றிவிட்டு பள்ளிக்குள் வருமாறு கூறியுள்ளார். ஆனால் மாணவன் கோயிலுக்கு விரதம் இருந்து இவை அணிந்திருப்பதால் அவற்றை கழற்ற முடியாது என கூறியுள்ளார். இதையடுத்து அந்த மாணவன் வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். பின்னர் மாணவனின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியருடன் விளக்கம் கேட்டனர்.
முதலில் பெற்றோர் கோயிலுக்கு விரதம் இருப்பதால் மாணவனின் வேடத்தை கலைக்க முடியாது என்று கூறினர். இதை தொடர்ந்து அவர்களிடம் பேசிய ஆசிரியர்கள் எந்த வித கோபமும் ஆத்திரமும் இல்லாமல் அவர்கள் கருத்தை ஏற்று பின் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் சீருடை அணிவதன் நோக்கம் குறித்தும் பெற்றோருக்கு எடுத்துரைத்தனர். முதலில் வீம்பு பிடித்த பெற்றோர் பின்னர் ஆசிரியர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்களில் உணர்ச்சி வசப்படாமல் எளிய முறையில் அவர்களுக்கு எடுத்து சொல்லி பிரச்சனையை கையாண்ட ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.