தூத்துக்குடி ஜோயல் ஏற்பாட்டில் 200 ஆட்டோக்களில் உதயநிதி பிறந்தநாள் விளம்பரம்




தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இளைஞரணி கடந்த 1980ம் ஆண்டு ஜுலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் முறைப்படி துவங்கப்பட்டது. 1980ம் ஆண்டின் மத்தியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த இளைஞரணி அமைப்பின் துவக்கம் திமுக கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த துவக்க விழாவின் போது முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.எஸ்.தென்னரசு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், துரைமுருகன், தா.கிருஷ்ணன், காவேரி மணியம், தங்கப்பாண்டியன், வைகோ, பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.




திமுகவில் உள்ள பல அணிகளில் இளைஞரணி மிக சக்திவாய்ந்த அணியாக உருவெடுத்தது. இது மு.க. ஸ்டாலினுக்காக உருவாக்கப்பட்ட ஓர் அணி என விமர்சனங்கள் எழுந்தாலும், அந்தக் கூட்டத்தில் கட்சிக்கும் தலைவருக்கும் தன் விசுவாசத்தை உறுதிசெய்யும் வகையில் பேசினார் வைகோ. இதற்குப் பிறகு, திருச்சியில் அந்த அணியின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றபோது ஏழு அமைப்பாளர்கள் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டனர்.அதில் மு.க. ஸ்டாலினும் ஒருவராக நியமிக்கப்பட்டார்.




பிறகு மெல்ல மெல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞரணி உருவாக்கப்பட்டது. வெகு விரைவிலேயே, 1983ஆம் ஆண்டின் இறுதியில் அந்த அமைப்பின் மாநிலச் செயலராக மு.க. ஸ்டாலின் உயர்த்தப்பட்டார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 60 வயதைத் தாண்டிய நிலையிலும் தி.மு.க. இளைஞரணியின் செயலாளராக மு.க. ஸ்டாலினே பதவி வகித்தார். தி.மு.கவில் உள்ள பல அணிகளில் இளைஞரணி மிக சக்திவாய்ந்த ஒரு அணியாக உருவெடுத்தது. திமுகவின் பேரணிகளில் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து பங்குபெறுவர்.




திமுகவின் இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் பணியாற்றிய காலத்தில் ஆயிரம்விளக்கு தொகுதி  எம்எல்ஏ, சென்னை மேயராகவும் பணியாற்றி கட்சியில் பொருளாளராகவும், 2006ல் உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாக உயர்ந்த ஸ்டாலின், அதன் ஒருப்பகுதியாக திமுகவின் செயல் தலைவராகவும் பணியாற்றினார். தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கு மேல் திமுக இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலினே பதவி வகித்தார். மு.க.ஸ்டாலின் இளைஞரணி தலைவராக இருந்ததால் இளைஞரணிக்கு முக்கிய பங்கு வழங்கப்பட்டது. 




அதன்பின் கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகளை வரைமுறைப்படுத்தி மாணவரணி, மகளிரணி என பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டு செயல்பட்ட திமுக சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் திமுகவின் செயல்பாடுகளையும் அரசின் திட்டங்களை கொண்டு செல்ல ஏதுவாக தகவல் தொழில் நுட்ப அணி என புதிய அணி உருவாக்கப்பட்டது.




2017ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அந்த அணியின் செயலாளர் பதவி முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, உதயநிதி ஸ்டாலினும் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். உதயநிதியை இளைஞரணித் தலைவராக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி தலைமைக் கழகத்திற்கு எல்லா மாவட்டங்களும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டார்.




சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற  உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் பங்கேற்ற தற்போதைய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, இளைஞரணி செயலாளராக இருந்தவர் தான் தற்போது முதல்வராக உள்ளார் என பொடி வைத்து பேசிய அவர் தற்போது, தான் இளைஞரணி தலைவராக உள்ளதையும் சுட்டிக்காட்டி இளைஞரணியினருக்கு எதிர்காலம் இருக்கிறது என்றார்.




மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இரண்டாம் முறையாக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று உள்ள உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி  வக்கீல் ஜோயல்,  கொரோனா தொற்று  காலக்கட்டத்தில் பல மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளராக இருந்த போது பகுதி வாரியாக அவரது சார்பில் அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் குட்புக்கில் இடம் பெற்றார்.




இந்நிலையில், இரண்டாவது முறையாக மாநில இளைஞரணி துணைச் செயலாளராக ஜோயல் தேர்வு செய்யப்பட்ட பின் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  தூத்துக்குடி மாநகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் இன்று பிறந்த நாள் காணும் இளம் தலைவர், ஆரூயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்றும் தலைவர் வழியில் ஜோயல் என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளார்.




தூத்துக்குடி மாநகர் பகுதியில் சுற்றிவரும் ஆட்டோக்களில் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து ஸ்டிக்கராக காட்சியளிக்கிறது. அதிரடிக்கு பெயர்போன ஜோயல், ஆட்டோக்களில் நூதன முறையில் விளம்பரம் செய்துள்ளார். இது தூத்துக்குடி திமுக இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.