தமிழின் இலக்கியச் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் பொருநை இலக்கியத் திருவிழா தமிழக அரசு சார்பில் இரண்டு நாட்கள் நெல்லை மாநகரில் நடைபெறுகிறது. இரண்டு நாள் நடக்கும் பொருநை இலக்கிய விழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம், நேருஜி கலையரங்கம், மேலகோட்டை வாசல், பி.பி.எல் திருமணமண்டபம், நூற்றாண்டு மண்டபம் ஆகிய ஐந்து இடங்களில் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள், மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கிறது. முதல் நாள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சாகித்திய அகாடெமி விருது பெற்ற வண்ணதாசன், கேரள மாநில பிரபல எழுத்தாளர் கல்பட்டா நாராயணன், எழுத்தாளர் பவாசெல்லத்துரை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.




தொடர்ந்து பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடந்த முதல் நாள் தொடக்க விழாவில் ஒளி, ஒலி காட்சி வழியாக  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறும் பொழுது, "தமிழ் சமூகம்  இலக்கிய முதுர்ச்சியும்,  பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம். கீழடி, சிவகளை, கொற்கை போன்ற அகழ்வாய்வு வழியாகவும், பல்வேறு முன்னெடுப்பு வழியாகவும், அறிவியல் பூர்வமாக நிறுவப்படும் தொன்மை மிகுந்த நமது பெருமை. இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவு சார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடக்க உள்ளது. தமிழின் இலக்கிய செழுமையை போற்றும் வகையில் பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை போன்ற 5 இலக்கிய திருவிழாக்கள் நடத்தபட உள்ளது. முதல் நிகழ்வாக அன்னை மடியான நெல்லை பொருநை நகரத்தில் நடத்தப்படுகிறது. ”அறிவை விரிவு செய், அகண்டமாக்கு” என பாவேந்தர் சொல்லுக்கு இணங்க தமிழ் மண்ணின் செழுமைகளை உலகுக்கு எடுத்துரைக்க பொருநை இலக்கிய விழா அமையட்டும். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்” என தெரிவித்தார். 





இதனைத் தொடர்ந்து விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்,  “நெல்லை என்றால் தியாக வரலாறு உள்ள பூமி, இந்த மண்ணில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கப்பட்டுள்ளது பெருமைக்குரியதாகும். பொருநை நிகழ்ச்சி என்பது எனது 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவரை நடத்தப்படவில்லை. இதற்காக பள்ளிக் கல்வித்துறையை பாராட்டுகிறேன். தமிழகத்தில் அதிக துறை இருக்கும் போது பள்ளி கல்வி துறைக்கு தமிழக முதல்வர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்றால் இந்த விழாவை சான்றாக கொள்ளலாம். ஒரு நாட்டினுடைய செல்வம் என்பது கல்வி. அந்த கல்வியை கற்றுகொடுக்கும் சிறந்த இடமாக தமிழகம் விளங்குகிறது. உயர்கல்வி துறையில் இந்தியாவிலே முதலிடம் பெற்றிருக்கின்ற தமிழ்நாடு தான் இன்று மிகப்பெரிய ஒரு துறையின் நீட்சியாக இருக்கிறது.  ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் என 88% பேர் தமிழகத்தில் திரவிட இனத்தை சார்ந்தவர்கள் வாழ்கின்றனர். திராவிட மாடல் என்பது சித்தாந்தம். அதனை தமிழக முதல்வர் கையிழுடுத்துள்ளார். தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி, மக்களைத்தேடி மருத்துவம் என மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. 75 ஆண்டு கால ஆட்சியில் குடிநீரே இல்லாத பல கிராமங்கள் இருந்த நிலையில் அது இருக்கக்கூடாது என்பதில் முதல்வர் எல்லா கிராமங்களுக்கும் குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, பள்ளி கல்வி வசதி, சாலை வசதி என முக்கிய துறைகளை கொண்டு வந்து தமிழக மக்களை நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்கு முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவர் வந்த நாள் முதல் இந்த நாள் வரை ஓய்வு என்பது இல்லை. இந்திய அளவில் 14- வது இடத்தில் இருந்த தமிழக தொழில்துறை, தற்போது 3 - வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று சொன்னால் முதல்வரின் சிறந்த முயற்சி தான் காரணம்” என தெரிவித்தார். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி நடக்கிறது, வரலாற்றை உருவாக்கும் தலைவர்கள் தான் நிலைத்து இருப்பார்கள், அத்தகைய வரலாற்றை உருவாக்கியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்தார்.





தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி  பேசுகையில், “காணி மக்களுக்காக இல்லம் தேடி கல்வி மலைப்பிரதேசத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கிறேன். இந்தியாவிற்கே ஒரு எடுத்துக்காட்டான நிகழ்வு தான் இந்த இல்லம் தேடி கல்வி. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒரு ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் பள்ளி கல்வி துறை சார்பில் பல்வேறு திட்டங்களை நாம் தொடர்ந்து வழங்கி கொண்டிருக்கிறோம். இந்த திட்டத்திற்கெல்லாம் முத்தாய்ப்பான நிகழ்வாக இன்று நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழா என்றால் அது மிகையாகாது. மொழியை காப்பதற்கு எங்களால் மொழிப்போரும் நடத்த முடியும். இது போன்று மொழியின் பெருமையை எங்களால் எடுத்து சொல்ல முடியும் என்ற நிலையில் தான் இந்த நிகழ்வு. பொருநை என்றால் பழங்காலத்தில் தாமிரபரணியின் பெயர் என்றும் சொல்கின்றனர். இலக்கியம் என்று சொன்னால் ஒரு நாட்டின் இனத்தின் வரலாற்றை பண்பாட்டை மட்டுமின்றி ஒரு மனிதன் தான் யார் என்பதை சொல்லக்கூடியதும் இலக்கியமும் அதை படைக்கும் நம்முடைய இலக்கியவாதிகளும் தான். துறையின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த ஒரு ஆட்சியிலும் இல்லாத ஒரு நிகழ்வாக பள்ளி கல்வி துறை பங்கோடு புத்தக திருவிழா நடைபெற வேண்டும் என்றதின் பேரில் 14 மாவட்டங்கள் முடிந்துவிட்டது. 3 மாவட்டங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது” என தெரிவித்தார். மேலும், அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளமாக நிலை நாட்டுகின்ற ஒரு அரசாங்கமாக நாங்கள் இருப்போம்” என தெரிவித்தார்.