நெல்லை மாவட்டம் பேட்டை அபிஷேகப்பட்டியைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆனந்தராஜ் ( வயது 63 ). இவர் கட்டுமான தொழில் அதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி டவுண் பகுதியில் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக காரில் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் டவுண் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளனர்.


அவர்கள் அளித்த புகாரின் பேரில் ஜேக்கப் ஆனந்தராஜ் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த சூழலில் பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள குளத்தில் ஊதிய நிலையில் சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மாநகர காவல்( மேற்கு) துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது உடல் ஊதிய நிலையில் கிடந்த சடலம் ஜேக்கப் ஆனந்தராஜ் என்று காவல்துறையினர் உறுதி செய்தனர்.  மேலும் சடலத்தின் ஒரு கை இல்லாமல் இருந்துள்ளது. தடய அறிவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சென்றனர்,. பின்னர் சடலத்தை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர்.




மேலும் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் கயிறு ஒன்று கிடந்துள்ளது. எனவே அந்த கயிறால் ஜேக்கப் ஆனந்தராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து துணை ஆணையர் சரவணக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சடலம் கிடந்த இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இது கொலையை ? தற்கொலையா என்பது விசாரணைக்கு பிறகே தெரியும். நாய் கடித்துள்ளதால் ஒரு கை காணாமல் போனதாக தெரிகிறது என்றும் தெரிவித்தார்.


இந்த சூழலிலல் இந்த வழக்கு குறித்து காவல்துறை நடத்திய விசாரணையின் பேரில் மாலை அளித்த செய்திக்குறிப்பில் கூறியதாவது, ஜேக்கப் ஆனந்தராஜிடம் வேலை செய்து வந்த நரசிங்க நல்லூரை சேர்ந்த தேவி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 22 ஆம் தேதி தேவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.  ஆனால் தேவி, சங்கரன்கோவிலை சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப் என்பவரையும் காதலித்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஜேக்கப் ஆனந்தராஜ் தேவியிடம் தவறாக நடக்க  முற்பட்ட நிலையில், தேவியும் பிரின்ஸ் ஜேக்கப்பும் சேர்ந்து ஆனந்த ராஜை கொலை செய்து வீட்டின் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளனர்.




பின்னர் ஜேக்கப் ஆனந்தராஜின் காரை சுத்தமல்லி விலக்கு பெட்ரோல் பல்க் அருகே நிறுத்தி விட்டு இரவில் தேவியின் இருசக்கர வாகனத்தில் இறந்துபோன ஜேக்கப் ஆனந்தராஜின் உடலை இருவரும் எடுத்து சென்று ஒரு குளத்தின் கரையில் போட்டுவிட்டு வந்துள்ளனர். பின்னர் வழக்கை திசை திருப்பும் நோக்கோடு பிரின்ஸ் ஜேக்கப்  என்பவர் ஜேக்கப் ஆனந்தராஜின் செல்போனை எடுத்து கொண்டு மதுரை சென்று அங்கிருந்து அவரது மகன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வேறு நபர் போல் பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.


இந்த நிலையில் தான் ஜேக்கப் ஆனந்தராஜ் காணாமல் போனதாக அவரது மகள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், அதன் அடிப்படையில் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் பேரில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த கொலையை திட்டமிட்டு செய்த தேவி மற்றும் அவரது காதலன் பிரின்ஸ்  ஜேக்கப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது..


நெல்லையில் கடந்த சில நாட்களாக ஜாதி ரீதியிலான மோதலில் கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில்  தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மாவட்ட காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.. இது போன்ற சூழ்நிலையில் மேலும் ஒரு சம்பவமாக தொழிலதிபரை திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.