நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக வந்தவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்படி, இது தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் கடந்தாண்டு மார்ச் 26 ஆம் தேதி விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில், அப்போதைய அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கடந்தாண்டு மார்ச் 29ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும், அதே மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்.
நீதிமன்ற விசாரணை:
இதனை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் ஏ டி எஸ் பி சங்கர் இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். இதில் வேத நாராயணன், சூர்யா, வெங்கடேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் பெயரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 14 காவல் துறை அலுவலர்கள் மீது குற்றத்தில் முகாந்திரம் இருப்பதாக சிபிசிஐடி போலீசாரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் ஏ. எஸ். பி பல்வீர் சிங்கின் பணியிட நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
பிப்ரவரி 14ம் தேதி ஒத்திவைப்பு:
இந்த நிலையில் இன்று நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் உட்பட 14 காவல் துறை அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் இந்த வழக்கானது வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இது குறித்து பல்வீர் சிங்கின் வழக்கறிஞர் துரைராஜ் . இன்று பல்வீர் சிங் வழக்கு விசாரணைக்கு வந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்போவதாக கூறினார்கள். அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்தோம். குற்றம் சாட்டப்பட்ட பல்வீர் சிங் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு இந்த வழக்கில் விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இனி சாட்களை கலைப்பார் என்ற கேள்விக்கே இடமில்லை, அதேபோல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் காவல்துறையை சேர்ந்தவர்கள் தான், அவர்கள் 13 பேரும் விசாரணையின் போது கூட பணியில் தான் இருந்துள்ளனர், எனவே இது இதில் எந்த விதமான சட்ட மீறல்களோ, முறைகேடுகளோ இல்லை என தெரிவித்தார்.