நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா நேற்று தொடங்கியது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்தியாவில் அதிக சாகித்ய அகாதமி விருது பெற்ற பகுதியாக பொருநை ஆற்றங்கரை பகுதி அமைந்துள்ளது. தன்னை பற்றி நினைக்காமல் நாட்டைப் பற்றியும் சமூகத்தை பற்றியும் சிந்திப்பவர்கள் தான் படைப்பாளிகள். மறைந்த தலைவர் கலைஞர் தமிழ் இலக்கியம் மீது உள்ள பற்றின் காரணமாக அவர் எடுத்த முயற்சியால் தான் தமிழ் மொழி அழியாமல் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகில் முதல் தோன்றிய மூன்று மொழிகளில் தமிழ் மொழி மட்டுமே அழியாமல் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் தோன்றிய மொழிகளில் வெளிநாடுகளில் ஆட்சி மொழியாக தமிழ் இருந்து வருகிறது. இந்தியாவை தாண்டி உலகின் ஏழு நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கும் தமிழ் தமிழகத்தில் மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது என்றால் அதன் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இன்னும் தமிழ் ஆட்சி மொழியாக அங்கீகாரம் பெற முடியாத நிலையில் இருக்கிறது. உலக அளவில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டியது தமிழ் மொழி.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பலர் வறுமையில் இருந்ததை அறிந்து அவர்களை கௌரவம் செய்ததுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாக வரவேண்டும் அதற்கான பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் ஆட்சி மொழி அந்தஸ்து கிடைப்பது மிக கடினமாக உள்ளது. அதனால் தான் இந்தியாவில் ஆட்சி மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும் என்ற உரிமை குரலை தொடர்ந்து நாம் கொடுக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் மொழிக்கு தான் முதன் முதலில் செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. மிக குறைந்த பேச்சு வழக்கில் உள்ள சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு 2000 கோடி ரூபாய் வளர்ச்சி நிதியாக கொடுக்கிறது. ஆனால் 10 கோடி பேர் பேசும் தமிழ் மொழிக்கு வெறும் 40 கோடி 50 கோடி தான் தருகின்றனர்.
3,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாகரீகம் தோன்றியுள்ளது. சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முந்தைய நாகரீகமாக கருதப்படும் தமிழகத்தில் கீழடி ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நடத்திய ஆய்வில் அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களிலும் கீழடி உள்ளிட்ட தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களிலும் ஒற்றுமை அதிக உள்ளது. சிந்து சமவெளி பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் தமிழர்கள் முதன் முதலில் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளம் அங்கு இருக்கிறது. அதனை கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் ஒன்றிய அரசு முழுமையாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். இந்தியாவின் வரலாறு சிந்துச் சமவெளியில் இருந்து தொடங்கினாலும் பொருநை நதி கரையில் தொடங்கினாலும் தமிழர்களின் நாகரீகமாகத்தான் வெளி வருகிறது. மனிதன் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பதை திருக்குறள் இரண்டு அடியில் காட்டுகிறது.
சாதியால், மதத்தால் யாரும் நம்மை பிரிக்க முடியாது. திட்டமிட்டே சிலர் நம்மை பிரிக்க பார்க்கிறார்கள். அதனை யாரும் ஏற்க கூடாது எனவேதான் சமூக நீதி, தமிழர் என்ற அடையாளத்துடன் முதல்வர் செயல்படுகிறார். ஒரு முறை ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் டெல்லியில் பசுவதை தடை திட்டம் கொண்டு வருவது தொடர்பாக பேரணி நடத்த வேண்டும் என காமராஜரிடம் கேட்டுள்ளார். ஆனால் காமராஜர் அதை தடுத்தார். பேரணி நடத்த வேண்டாம் என்றார். அதனால் அவர் வாழ்ந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி அவரை கொலை செய்யப் பார்த்தார்கள். அவர் தப்பித்து விட்டார். நாங்கள் கிராமம் தோறும் பள்ளிகள் கட்டுவோம் என்கிறோம். நீங்கள் கிராமம் தோறும் கோயில் கட்டுவோம் என்கிறீர்கள் என்று காமராஜர் சொன்னார். கல்விதான் நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது என்று சபாநாயகர் அப்பாவு பேசினார்.