தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வு மேற்கொண்டது. அந்த வகையில் உறுதிமொழி குழுவின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், உறுதிமொழி குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்கள் அண்ணாதுரை, அருள் மற்றும் மோகன் உள்ளிட்டவர்கள் குற்றாலம் கலைவாணர் அரங்கம், சுற்றுலா தளமான மெயின் அருவி, திரு.வி.க இல்லம் உள்ளிட்டவைகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். '
புதுப்பித்தல் பணிக்கு ஒரு கோடியா?
அப்போது குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பாராமரிப்பு குறித்து உறுதிமொழி குழு பல்வேறு குறைகளை மேற்கொண்டது. இதில் குறிப்பாக, புதுப்பித்தல் பணிகளுக்காக அரசு ரூபாய் ஒரு கோடி வழங்கி உள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மற்ற இடங்கள் முறையாக புதுப்பிக்காமல் விடப்பட்டதை மேற்கோள் காட்டினார். இதற்காகவா ஒரு கோடி என்று அதிகாரிகளிடம் வியப்புடன் கேள்வியும் எழுப்பினார். மேலும் முழுமையாக பணிகளை மேற்கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் உறுதிமொழி குழு தலைவர் எடுத்துரைத்தார்.
இதனை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, ஆய்வை தொடர்ந்து உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குற்றாலம் பகுதி முழுவதும் மாறுவேடத்தில் காலை நேரத்தில் ஆய்வை மேற்கொண்டேன். அப்போது பொதுமக்கள் என்னிடம் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி உள்ளனர். அந்த வகையில் அருவியில் குளிக்கும் பெண்கள் பாதுகப்பு கருதி, ஆண்கள் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு இடையே பெரியதாக தடுப்புச் சுவர் எழுப்பப்பட வேண்டும். இந்த தடுப்புச்சுவர் அருவியில் வெள்ளப்பெருக்கு வந்தாலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் அமைய வேண்டும்.
உறுதிமொழி குழு:
அதோடு பெண்கள் உடை மாற்றும் கட்டிடங்கள் முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும். ஆண்கள் பகுதியில் உள்ளது போல உயர் கோபுர மின்விளக்குகள் பெண்கள் பகுதியிலும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினர். குற்றாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கின் போது பொதுமக்கள் பலர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அறிக்கையை காவல்துறையினரிடம் கேட்டுள்ளேன்.
அதன் அடிப்படையிலும், ஆட்சியரின் நேரடி கள ஆய்வு அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் குற்றாலத்தில் விற்கக்கூடிய உணவு பண்டங்கள் முறையாக, சுகாதாரமாக விற்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து உறுதிமொழி குழு சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் சுட்டிக் காட்டி கூறியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்