சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்ய தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
துணைவேந்தர் நியமன விவகாரம்:
வழக்கமாக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். 3 பேர் கொண்ட தேடுதல் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 நபர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக அண்மையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
அதோடு, தேடுதல் குழுவில் யு.ஜி.சி-யின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார். இந்நிலையில் தான், சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
உருவபடம் எரிப்பு போராட்டம்:
துணைவேந்தரை நியமிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பது தான் வழக்கம். ஆனால், இப்போது நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் தரப்பில் யு.ஜி.சி. பிரதிநிதி ஒருவரும் இந்த தேடுதல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆளுநரின் அறிவிப்பை எதிர்த்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வாயிலில் இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஆளுநர் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆளுநரின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்தும், பல்கலைக்கழகங்களில் சனாதான கொள்கையை புகுத்தும் நடைமுறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆளுநரின் புகைப்படங்களை இந்திய மாணவர் சங்கத்தினர் எரிப்பதற்கு முயற்சி மேற்கொண்ட நிலையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநரின் புகைப்படங்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க கேட்டனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் கையில் இருந்த புகைப்படங்களை கிழித்து போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ஆளுநரை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர். இதனால் பல்கலைக்கழக வளாகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. மாணவர் சங்கத்தின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்