நெல்லை மாநகர பகுதிகளில் கைபேசிகள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி கைப்பற்றிய செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. காணாமல்போன,  கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் துரைகுமார் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் துரைகுமார், நெல்லை மாநகரத்தில் கைபேசி காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் விசாரணை நடத்தி 33 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 233 கைபேசிகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது, இணையதளத்தில் பரிசு விழுந்ததாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் மோசடி செய்த நபர்கள் ஓடிபி, ஏ டி எம், கே ஒய் சி போன்றவைகள் மூலம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான புகார்கள் அடிப்படையில் விசாரணை நடத்தி 26 லட்சத்து 73 ஆயிரத்து 450 ரூபாய் பறிமுதல் செய்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.




இணையதள பண மோசடி தொடர்பாக 23 புகார்கள் பெறப்பட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்களின் கணக்குகளை முடக்கி வைக்கப் பட்டுள்ளதாகவும், சைபர் கிரைம் பண மோசடி தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டு நெல்லை மாநகர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது .  மேலும் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் என்பது  வரப் பெற்ற புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதன் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது, தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இந்த குற்றங்கள் குறைந்த அளவு நபரே செய்கின்றனர், தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.


ஆனால் பண மோசடியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் போலியான ஆவணங்களை வங்கிகளில் கொடுத்துள்ளதால் மோசடி நபர்களை கைது செய்வது சவாலாக அமைந்துள்ளது. ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட   பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்களை கைது செய்ய நெல்லை மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு வட மாநிலத்தில் முகாமிட்டு மோசடியாளர்கள் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தனிப்படை வட மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் இருக்கும் தகவல் திரட்டபட்டு கைது  செய்யப்படுவார்கள் என தெரிவித்தார் . இது போன்ற மோசடியில் மாட்டிக் கொள்ளும் நபர்கள் முதலில் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முதலில் பணத்தை பாதுகாத்துக் கொள்ளலாம், அதன் பின் மற்ற நடவடிக்கைகளை பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.




அதேபோல நண்பர் ஒருவரால் பணமோடியில் ஏமாற்றப்பட்ட முதியவர் காவல்துறை உதவியால் அதனை மீட்டெடுத்து உள்ளார், இது குறித்து அவர் கூறும் பொழுது, நான் அமெரிக்கா குடியுரிமை கொண்டவன், ஆனால் இந்திய குடியுரிமையும் பெற்று இருக்கிறேன்,  எனக்கு வயது 80, கடந்த வருடம் எனது நண்பர் ஒருவரே என்னை ஏமாற்றி செல்போனை வாங்கி அதன் மூலம் என் வங்கி கணக்கில் இருந்த 22 லட்சம் பணத்தை நண்பர் தனது வங்கி கணக்கில் மாற்றியுள்ளார், இது குறித்து போலிசாருக்கு தகவல் அளித்தேன், போலீசார் விரைந்து செயல்பட்டு பணத்தை மொத்தமாக மீட்டு கொடுத்தனர், என்று இன்ப அதிர்ச்சி அடைந்த தவமணி, எனது பணம் திரும்ப கிடைக்கும் என நினைத்து கூட பார்க்கவில்லை, சிறப்பாக செயல்பட்ட நெல்லை மாநகர காவல் துறைக்கு எனது  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.