உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால், கடந்த சில நாட்களாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது, உலகிலுள்ள பல்வேறு நாட்டினரும் தங்களது மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர் . அந்த வகையில் இந்தியாவிலும் உக்ரைன் நாட்டில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர்களையும், பொதுமக்களையும் படிப்படியாக மீட்டு வருகின்றனர். இதில் உக்ரைன் நாட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். சிலர் மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவ-மாணவிகள் அங்கு தவித்த நிலையில், 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 5 பேர் அங்கு தவித்து வருகின்றனர்.



அதில் கடலூர் எம்.புதூரை சேர்ந்த உதயகுமார் என்ற மருத்துவ மாணவரும் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவதாக அவரது தந்தை இளம்வழுதி மற்றும் அவரது தாயார் உறவினருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்களை நேரில் சந்தித்து மகனை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தார். இது பற்றி அவர் கண்ணீர் மல்க கூறியதாவது, எனது மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு படிப்பதற்காக கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் சென்றான். இந்த நிலையில் அந்த நாடு மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. அவன் வசிக்கும் இடத்திலேயே குண்டுகள் வெடித்து வருவதால் மிகவும் பதற்றத்தில் இருக்கிறான். அவனோடு சேர்ந்து தமிழக மாணவர்கள் 38 பேர் இருக்கிறார்கள்.

 



 

அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருப்பதால் கடந்த 5 நாட்களாக உணவு கிடைக்காமல் தவித்து வருகிறேன். அங்கு உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்று ஏறினாலும், தமிழக மாணவர்களை உக்ரைன் மாணவர்கள் கீழே தள்ளி விடுகிறார்களாம்.  இதனால் அவனால் வர முடியவில்லை. இது வரை அவனுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நாங்கள் தான் படிக்கவில்லை பிள்ளையாவது படிக்கட்டும் என்று சொந்த ஊரைவிட்டு வெளியே வந்து வாடகை வீட்டிலிருந்து ஒன்பது மாதமாக பத்து வட்டி ஐந்து வட்டிக்கு கடனை வாங்கி பிள்ளையை படிக்காத அனுப்பினோம் ஆனால் தற்போது அவன் அங்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறான். ஆகவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, அவனை பத்திரமாக மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார். தனது மகனை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என அந்த தாய் கண்ணீர் மல்க கூறியது அனைவரது மனதையும் உலுக்கியது.