தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்திற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்குப் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடி சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி குறித்தும் மற்றும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் என்.டி.பி.எல் அனல்மின் நிலைய வளாகத்திற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கு புரிவதற்காக இந்தி மொழியிலேயே கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.




இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பேசுகையில், தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும், தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாரும் உங்களது பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் உள்ளோம், நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்று வர அச்சப்படத் தேவையில்லை என்றும், உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை கையாண்டு கவனத்துடன் பணிபுரியுமாறும் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் எடுத்துரைத்தனர்.




மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உதவி அலைபேசி எண் 82493 31660 என்ற எண் குறித்தும், இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ குறைகள் இருந்தாலோ தகவல் தெரிவித்தால் நீங்கள் இருக்குமிடத்திற்கு உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று, அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்குரிய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இந்நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட காவல்துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.