தமிழக முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர். இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டது..  அதனை மேல்முறையீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள  இ-சேவை மையங்களில் பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்க தொடங்கினர்.


மாவட்டத்தில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் பெண்கள் மற்றும் முதியவர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது..  குறிப்பாக காலை 8 மணி முதலே தாலுகா அலுவலகங்களில் பெண்கள் குவியத் தொடங்கியதோடு வரிசையாக நின்று டோக்கன் பெற்று செல்கின்றனர். குறிப்பாக பலர் நிராகரிக்கப்பட்ட மனுக்கான காரணங்களை தெரிந்து கொள்ள காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.


இந்நிலையில் நெல்லை மாவட்டம்  சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் தங்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை வரவில்லை என்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  தாலுகா அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் குவியத் தொடங்கினர். அப்போது அவர்கள் எங்களுக்கு வந்த குறுஞ்செய்தியில் உங்கள் குடும்ப அட்டையில் 21 வயசு நிரம்பிய பெண் இல்லை என வந்துள்ளது என கூறி அதிகாரிகளிடம் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். இது குறித்து திருநங்கை சாம்பவி என்பவர் கூறும் பொழுது, திருநங்கைகளுக்கும் மகளிர் உதவித்தொகை உண்டு என முதல்வர் அறிவித்திருந்தார்.. அதன்பேரில் நாங்கள் விண்ணப்பித்திருந்தோம்.. எங்கள் பகுதியில் மட்டும் 60 திருநங்கைகள் உள்ளனர். எங்களுக்கு வந்த குறுஞ்செய்தியில் 21 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இல்லை என வந்துள்ளது. தமிழக அரசு எங்களுக்கு அதிகமான உதவிகள் செய்துள்ளது. அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் எங்களை பெண்ணே இல்லை என அரசாங்கமே புறக்கணித்து செய்தி அனுப்பியுள்ளது.. அப்படியென்றால் மக்கள் எந்த விதத்தில் எங்களை பார்ப்பார்கள் என மனவேதனையில் உள்ளோம் என்று தெரிவித்தனர்.


 




தொடர்ந்து இன்று கலைஞர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்ய அனைவரும் வந்துள்ளோம். நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம்.  வேலை இல்லாமல், எந்த வித உதவியும் இல்லாமல்  யாசகம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறோம். இந்த உதவித்தொகை எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு கிடைத்தால் மிக மகிழ்ச்சியாகவும் எங்களுக்கு உதவியாக இருக்கும். அதனால் தற்போது நாங்கள்  மேல்முறையீடு செய்துள்ளோம். இது தமிழக முதல்வர் கவனத்திற்கு செல்ல வேண்டும். அனைத்து திருநங்கைகளுக்கும் அவர்களுடைய சரியான ஆவணங்களை பெற்று கலைஞர் உரிமைத்தொகையை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண