பாஜக   மாநில தலைவர் அண்ணாமலையின் அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ”நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமில்லாத நிலையில், தமிழக வாக்காளர்களால் அவரின் மனக்கோட்டை தகர்ந்துவிட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பித்துப் பிடித்ததுபோல பேசி வருகின்றார். பாஜகவுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாமல், பிற கட்சிகளை அவர் விமர்சித்து வருகின்றார்.


அந்த வகையில் அவர் அதிமுக கூட்டணி நிலைப்பாடு குறித்தும், எஸ்டிபிஐ கட்சி குறித்தும் அவர் அவதூறாக பேசியுள்ளார். அவரின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டு மக்களிடையே வெறுப்பை விதைக்கும், ஜனநாயகத்தை சிதைத்து பாசிச திட்டங்களால் மக்களை துன்புறுத்தும் பாஜக என்கிற கட்சியில் இருந்து கொண்டு, எஸ்டிபிஐ கட்சியை அவதூறாக பேச பாஜகவின் அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. 


இந்த தேர்தலில் வெற்றி நழுவிச் சென்றாலும், கடந்த தேர்தலை விட அதிமுகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதை அதன் வாக்கு சதவீதம் உணர்த்துகிறது. பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு மக்களின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் தான் அண்ணாமலை இதுபோன்ற அவதூறுகளை பேசி வருகின்றார்.  தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டு தான் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கின்றது. பாஜக ஆட்சிக்கு எதிரான மக்கள் நிலைப்பாடு தான் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் எதிரொலித்துள்ளதை பார்க்க முடிகின்றது.


எப்போதும் போலவே தமிழக வாக்காளர்கள் இந்த முறையும் பாஜகவை நிராகரித்துள்ளனர் என்பதே கள எதார்த்தமாக இருக்கின்றது. இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத குழப்ப நிலையில் தான் அண்ணாமலை அதிமுக குறித்தும் அதிமுக கூட்டணி குறித்தும் விமர்சித்து வருகின்றார். இதனை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.


நாடு முழுவதும் வெறுப்பு பேச்சுக்கள் மூலம் கீழ்த்தரமான அரசியல் செய்கின்ற கட்சி பாஜக. இந்த தேர்தலில் கூட பிரதமர் மோடி தொடங்கி அதன் தலைவர்கள் வரை தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்பு பிரச்சாரங்களையே மேற்கொண்டனர். நாடு முழுவதும் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள் முழுவதும் இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்கும் எதிரான வெறுப்பு பிரச்சாரத்தால் நிரம்பியிருந்தன.


இதன் காரணமாகவே, உ.பியிலும், ராஜஸ்தானிலும், மேற்கு வங்கத்திலும் பாஜகவை மக்கள் நிராகரித்தனர். 10 ஆண்டுகால தோல்வியான ஆட்சிக்கும், அவர்களின் வெறுப்பு அரசியலுக்கும் மக்கள் அளித்துள்ள பதிலடிதான் தற்போதைய பாஜகவின் சரிவுக்கு காரணம். தமிழக வாக்காளர்கள் தெளிவானவர்கள், ஒருபோதும் அண்ணாமலை போன்ற அரசியல் கோமாளிகளின் பேச்சுக்களை பொருட்டாக கருதி, பாஜகவை ஆதரிக்கும் பாரதூரமான நிலைக்கு அவர் செல்ல மாட்டார்கள்.


பொய்யை உண்மைப் போல பேசினால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற அண்ணாமலையின் பொய் உருட்டல்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையே தேர்தல் முடிவு வெளிக்காட்டுகிறது” என்று அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.