நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு பி பி டி சி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500 மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி 2028 ஆம் ஆண்டுக்குள் தனியார் தேயிலை நிறுவனத்தை காலி செய்திட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த சூழலில் வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் தேயிலை தோட்டத்தில் பணி செய்யும் அனைத்து தொழிலாளர்களும் காலி செய்திட வேண்டும் என்ற அறிவிப்பு தேயிலைத் தோட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் விருப்ப ஓய்வு பெறும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி மாஞ்சோலை பகுதி மக்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மாஞ்சோலை பகுதி மக்கள் நல சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் அனைத்து கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் காக்கவும் தொடர்ந்து அப்பகுதியிலேயே பொதுமக்கள் வசிக்கவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மாஞ்சோலை பகுதியில் உள்ள மக்களின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு வரை தேயிலை தோட்டம் செயல்படுவதற்கு கால அவகாசம் இருக்கும் நிலையில் வரும் ஜூன் மாதத்திற்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என தேயிலைத் தோட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருவது சட்டத்திற்கு புறமானது என்பதை ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.
மேலும் தமிழக அரசு உடனடியாக மாஞ்சோலை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் எடுத்து நடத்த வேண்டும். ஜூன் மாத இறுதிக்குள் அனைவரையும் காலி செய்ய வலியுறுத்தி மாஞ்சோலை பகுதியில் இருக்கும் கல்விக் கூடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தாமல் இருப்பதை கைவிட்டு உடனடியாக மாணவர்கள் அங்கேயே படிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விருப்ப ஓய்வு தெரிவித்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அவர்கள் தொடர்ந்து வசிக்க குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கவும், மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
மேலும் அனைத்துக்கட்சி சார்பில் வழங்கப்பட்ட மனு அரசின் பரிசீலனைக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதியளித்துள்ளார்.