நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை பாஜக செய்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு சார்பாக பிரதமர் மோடி விரைந்து தனது முழு முயற்சியாக செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்கே?
இராணுவ படை வந்துள்ளது. 5 ஹெலிஹாப்டர் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் 17 மீட்பு படையினரை கொடுத்துள்ளனர். அனைத்து இடத்திலும் மீட்பு பணிகளை வேகமாக செய்து வருகின்றனர். மத்திய அரசை பொறுத்தவரை முழு வீச்சோடு போர்க்கால அடிப்படையில் தென் தமிழகத்திற்கு எந்த விதமான உதவி செய்ய வேண்டுமோ செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் எல்லோரும் கேட்கும் ஒரே ஒரு கேள்வி முதலமைச்சர் முக ஸ்டாலின் எங்கே? என்பது தான்.
முதலமைச்சர் இந்த நேரத்தில் இருக்க வேண்டிய இடம் தென் தமிழகத்தில். ஆனால் அவர் இந்திய கூட்டணியின் மீட்டிங்காக டெல்லி சென்றுள்ளார். இதை அவருடைய எம்பிக்களே சொன்னார்கள். அதற்கு பின் உப்புக்கு சப்பானியாக பிரதமரிடம் நேரம் கேட்கிறார்கள்.
முன்னறிவிப்பும் இல்லை:
ஒரு முதல்வர் கையாளும் ஒரு விசயம் இப்படி இருக்க கூடாது. அதிகாரிகளை முடுக்கிவிட்டு அமைச்சர்களுக்கு உறுதுணையாக இருந்து போர்க்கால அடிப்படையில் வேலை நடந்து இருக்க வேண்டும், எந்த வித முன்னறிவிப்பும் இல்லை, அதன் விளைவு ஆயிரக்கணக்கான வீடுகள் நீருக்குள் மூழ்கியது. எல்லா பொருட்களையும் இழந்து விட்டனர். ஆடு,மாடு, கோழி என அடிப்படை வாழ்வாதாரத்திற்கு இருக்கும் அனைத்தும் அடித்துக் கொண்டு போய்விட்டது. மக்கள் மீளாத்துயரத்தில் இருக்கின்றனர். நெல்லை மாநகரில் மட்டும் இதுவரை 5 பேர் உயரிழந்துள்ளனர். நிவாரணம் வேகமாக கொடுக்க வேண்டும். தமிழகத்தின் எல்லா இடத்திலும் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டுள்ளோம். அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்பது எங்களது கருத்து என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரணத்தை பொறுத்தவரை சென்னையில் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். அது மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கொடுக்கின்றனர். அதில் 75 % மத்திய அரசும், 25 % மாநில அரசும் கொடுக்கின்றனர். அடுத்து வீடுகள் சேதம், ஆடு மாடுகள் இழப்பு என்பதை கணக்கிட்டு மத்திய அரசு பணம் கொடுக்கத்தான் போகிறார்கள், இடையில் கொடுக்கும் பணம் அனைத்தும் உடனடி நிவாரணம். பாஜக தமிழகத்தை புறக்கணிப்பதாக திமுகவினர் சொல்கின்றனர். ஆனால் ஹெலிஹாப்டரில் இருந்து மீட்பு குழுவினர் வரை இங்கு வேலை செய்கின்றனர்.
உதயநிதிக்கு என்ன அனுபவம் உள்ளது?
ஆனால் முதலமைச்சர் எங்கே போனார். தமிழ்நாட்டை உறுதியாக புறக்கணிப்பது முதலமைச்சர் தான். சோனியா காந்தியை தொடர்ந்து கொண்டு இந்த கூட்டணி கூட்டத்தை தள்ளி வைக்கலாமே? அப்படி விரைந்து சென்று கலந்து கொள்வதில் என்ன இருக்கிறது? என கேள்வி எழுப்பினர். 6 ஆயிரம் கொடுக்கும் கவரில் ஸ்டாலின் போட்டோ அடித்து கொடுக்கிறார். கவர் மட்டும் தான் அவருடையது. உள்ள இருக்கும் பணம் மத்திய அரசினுடையது என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், உதய நிதியை அனுப்பி வைத்துள்ளார். அவருக்கும் பேரிடருக்கும் என்ன சம்பந்தம். துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வந்திருக்க வேண்டும். உதயநிதிக்கு சினிமாவில் நடித்ததை தவிர என்ன முன்அனுபவம் இருக்கிறது.
பேரிடர் மேலாண்மை பற்றி அவருக்கு தெரியுமா? பேரிடர் மேலாண்மைக்கும், உதயநிதிக்கும் தகுதி என்ன? என விமர்சித்தார், அவர் ஆட்சியருக்கு என்ன அட்வைஸ் கொடுப்பார். என்ன வழி நடத்துவார். இதை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் முடிவு செய்து விட்டார்கள் இவர்களுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை என்று.
சென்னைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நெல்லைக்கோ, தூத்துக்குடிக்கோ கிடைக்கவில்லை என்பது மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு. அதை நானும் உண்மை என்று சொல்கிறேன். சென்னையில் கூட இந்தளவு பாதிப்பை பார்க்கவில்லை, உயிர்சேதம் அதிகம். ஆனால் மாநில அரசு கவனம் கொடுக்கவில்லை. முதல்வர் இங்கு வந்து ஒரு வாரம் தென் தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்யட்டும். வரலாறு காணாத சேதம் இது. அதிகாரிகளின் வேகம் குறைவாக உள்ளது. அதிகாரமும் இருக்க வேண்டும், அனுபவமும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.