தூத்துக்குடி மாநகராட்சியின் முதல் மேயர் கஸ்தூரி தங்கம்  நியமனம் செய்யப்பட்டார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் நேரடி தேர்தலில் மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியது. தற்போது நேரடி மேயர் தேர்தல் இல்லாத நிலையிலும் ஹாட்ரிக் ஆசையோடு  களமிறங்கிய அதிமுக 6 வார்டுகளை மட்டுமே பிடித்து பலத்த தோல்வி அடைந்தது.




தூத்துக்குடி மாநகராட்சியை தனிபெரும் கட்சியாக திமுக கைப்பற்றியுள்ளது. இம்மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 20-வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த அமைச்சர் பெ.கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது மேயராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 443 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்றது.




முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய 30 நிமிடம் கழித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு வார்டாக வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வழங்கினர். பகல் 1 மணியளவில் அனைத்து வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.




திமுக சார்பில் 1-வது வார்டில் காந்திமணி, 3-வது வார்டில் ரெங்கசாமி, 4-வது வார்டில் நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ் மார்சலின், 6-வது வார்டில் ஜெயசீலி, 7-வது வார்டில் நிர்மல்ராஜ், 8-வது வார்டில் பவானி, 9-வது வார்டில் செபஸ்டின் சுதா, 12-வது வார்டில் தெய்வேந்திரன், 13-வது வார்டில் ஜாக்குலின் ஜெயா, 15-வது வார்டில் இசக்கிராஜா, 16-வது வார்டில் கண்ணன், 17-வது வார்டில் ராமர், 18-வது வார்டில் சீனிவாசன், 19-வது வார்டில் சோமசுந்தரி, 20-வது வார்டில் ஜெகன் பெரியசாமி, 21-வது வார்டில் ஜான்ஸிராணி, 22-வது வார்டில் மகேஸ்வரி, 24-வது வார்டில் மெட்டில்டா, 26-வது வார்டில் மரிய கீதா,  27-வது வார்டில் சரண்யா, 28-வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் ராமு அம்மாள், 29-வது வார்டில் கலைச்செல்வி, 30-வது வார்டில் அதிஷ்டமணி,  31-வது வார்டில் கனகராஜ், 32-வது வார்டில் கந்தசாமி, 33-வது வார்டில் பொன்னப்பன், 36-வது வார்டில் விஜயலெட்சுமி, 39-வது வார்டில் சுரேஷ்குமார், 40-வது வார்டில் ரிக்டா, 41-வது வார்டில் பேபி ஏஞ்சலின், 42-வது வார்டில் அன்னலெட்சுமி, 45-வது வார்டில் ராமகிருஷ்ணன், 46-வது வார்டில் ஜெனிட்டா, 47-வது வார்டில் ரெக்ஸ்லின், 48-வது வார்டில் ராஜேந்திரன், 49-வது வார்டில் வைதேகி, 50-வது வார்டில் சரவணகுமார், 53-வது வார்டில் முத்துவேல், 54-வது வார்டில் விஜயகுமார், 55-வது வார்டில் ராமதுரை, 56-வது வார்டில் சுயம்பு, 58-வது வார்டில் பச்சிராஜ், 60-வது வார்டில் பாலகுருசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


காங்கிரஸ் சார்பில் 11-வது வார்டில் கற்பக்கனி, 25-வது வார்டில் எடிண்டா, 34-வது வார்டில் சந்திரபோஸ் ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது வார்டில் தனலெட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 43-வது வார்டில் முத்துமாரி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் 38-வது வார்டில் மும்தாஜ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.




அதிமுக சார்பில் 10-வது வார்டில் பத்மாவதி, 35-வது வார்டில் வீரபாகு, 51-வது வார்டில் மந்திரமூர்த்தி, 52-வது வார்டில் வெற்றிச்செல்வன், 57-வது வார்டில் ஜெயலெட்சுமி , 59-வது வார்டில் ராஜா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சையாக 2-வது வார்டில் சுப்புலெட்சுமி, 14-வது வார்டில் முருகேசன், 37-வது வார்டில் பாப்பாத்தி, 44-வது வார்டில் ஜெயராணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து அக்கட்சியை சேர்ந்தவர் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.




திமுக சார்பில் 20-வது வார்டில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சியின் 4-வது மேயராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக ஓரிரு நாளில் அறிவிக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.




அதிமுக சார்பில் மேயர் வேட்பாளராக முன்னிலைப்பட்ட அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா 59-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.இருப்பினும் அதிமுகவினர் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளதால் அவரது மேயர் கனவு தகர்ந்து போனது.