நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை  மத்திய சிறையில்  கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,353  பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசிகள் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாரந்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பேச அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக சிறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்ற பிறகு தான் பேச முடியும். கைதிகளும், உறவினர்களும் சிறை வளாகத்தில் கம்பிகளுக்கு இடையே 2 மீட்டர் தூரத்தில் நின்று பேசுவார்கள்.


ஒரே நேரத்தில் ஏராளமானோர் அங்கு நின்று பேசுவதால் சத்தம் அதிகமாக இருக்கும். இதனால் உறவினர்கள் பேசுவதை கைதிகளால் புரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. குறிப்பாக வயதான கைதிகள் அல்லது வயதான உறவினர்கள் வந்து பேசும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொள்வதை தெளிவாக புரிந்து கொள்ள சிரமமாக இருந்து வந்தது. இதனை தொடர்ந்து சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் தெளிவாக பேசும் வகையில் மூன்றாவது போலீஸ் கமிஷன் பரிந்துரைப்படி நவீன முறையில் கண்ணாடி தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு  நேர்காணல் அறை வடிவமைக்கப்பட்டு இன்டர்காமில் பேசும் வகையில்  முதல்கட்டமாக  சென்னை, கோவை, மதுரை ஆகிய சிறைகளில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய  சிறையிலும் சிறைவாசிகளுடன் உறவினர்கள் தெளிவாக இடையூரின்றி பேசும் வகையில் நவீன நேர்காணல் அறை அமைக்கப்பட்டு இன்டர்காம் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை  சிறைத்துறை டிஐஜி பழனி  தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து சிறைவாசிகள் உறவினர்களுடன் இன்டர்காமில்  பேசினர்.




தமிழகம் முழுவதும் சிறைச்சாலையில் நேர்காணல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு சிறைவாசிகள் உறவினர்களுடன் இன்டர்காம் தொலைபேசியில் பேசும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு நேர்காணல் அறையில் ஒரே நேரத்தில் 26 பேர் பேசலாம். இந்த வசதி மூலம் சிறைவாசிகள் உறவினர்களிடம் தெளிவாக பேசமுடியும்  என சிறைத்துறை டிஐஜி பழனி தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண