நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை KTC நகர் அருகே AJR நகரைச் சேர்ந்தவர் சாரதா(31). இவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தூத்துக்குடி மாவட்டம், பூபாலராயபுரத்தை சேர்ந்த ராஜேஷ் ரெகுராம் (42) என்பவர் இந்திய கடலோரக் காவல்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு இந்திய கடலோரக்காவல்படையின் வேலைக்கு உரிய ஆணையைப் போலவே போலியான நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். ஆகவே ராஜேஷ் ரெகுராம் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அம்மனுவில் தெரிவித்திருந்தார். 


தொடர்ந்து மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் பொன். ரகு உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ராஜேஷ் ரெகுராம் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான உதவி ஆய்வாளர் பவுல் மற்றும் தலைமை காவலர்கள் ஜான் போஸ்கோ, ஆல்வின் கில்பர்ட் மற்றும் இரண்டாம் நிலைக்காவலர் பழனி ஆகியோர் சென்னையில்  தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலைமறைவாக இருந்த அவரை அதிரடியாக கைது செய்தனர்.




மேலும், அவரிடம் இருந்து 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததோடு, இளம் பெண்ணிடம் மோசடி செய்த பணத்தில் வாங்கிய ஆடம்பர சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நெல்லை அழைத்து வரப்பட்ட அவரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த ராஜேஷ் ரெகுராமை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இனிப்பு வழங்கி அவர்களை பாராட்டினார். வேலை வாங்கி தருவதாக இளம் பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி 20 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த சம்பவம்  நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண