நெல்லை மாவட்டத்தில் வரும் 28ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்  கூறும் பொழுது, “அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் வெற்றி விழாவும், நிறைவு விழாவுமாக பல்லடத்தில் நாளை மாலை நடைபெற இருக்கிறது. அதற்காக நரேந்திர மோடி நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அன்று தமிழகத்தில் தங்கி இருந்து நாளை மறுநாள் தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து  கொண்டு பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். அதன் பின் நெல்லை  பெல் மைதானத்தில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல் பிரச்சாரமாக தன் பொருநை என்று சொல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். 


நெல்லை தொகுதியில் அகில இந்திய தலைமை, மாநில தலைமை ஏற்கனவே சொன்னது போல தாமரை சார்பாக வேட்பாளர்களை  நிறுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு நெல்லையை பொருத்தவரை எத்தனையோ கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தாலும் ஒரு ஆளுகின்ற அரசு இருந்தால் தான் மக்களுக்கு அந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். உதாரணமாக தமிழகத்தில் இன்று  நிறைய திட்டங்கள் பட்ஜெட்டில் கூட அவர்களுடைய திட்டங்களாகவே அறிவித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது எல்லாமே மத்திய அரசின் திட்டம். மத்திய அரசின் திட்டம் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு நிறைய வேண்டும் என்று சொன்னால் எந்த கட்சி ஆளும்கட்சியாக வருகிறதோ அந்த கட்சி உறுப்பினராக இருந்தால் நல்ல வாய்ப்பாக அமையும்.


இன்றைக்கு தமிழகத்தின் கருத்துகணிப்பு தமிழ்நாட்டில் பிஜேபிக்கு 30 சதவிகிதம் வாக்குகளுக்கு மேல் உள்ளது என்பது தான். அதன்படி மும்முனை போட்டியாக இருந்தாலும் சரி, இருமுனை போட்டியாக இருந்தாலும் சரி, அரசு சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் சரி, தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களை பாஜக உறுதியாக கைப்பற்றும். பிரதமர் தூத்துக்குடி வருவதனால் முதல் இடமாக தாமரைக்கு ஓட்டு கேட்க தாமிரபரணி ஆற்றங்கரைக்கே நர்மதை ஆற்றங்கரை நாயகன் நரேந்திர மோடி வருகிறார். மாநில அரசின் திட்டங்களில் 75 சதவீதம் மத்திய அரசின் நிதியே உள்ளது. பணம் தரவில்லை என ஒரே பொய்யை திரும்பத் திரும்ப தமிழக அமைச்சர்களும், அரசும் கூறி வருகிறது. அதற்கான முடிவுகள் பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தெரியவரும்” என தெரிவித்தார்.  அதே போல, பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இணைய உள்ளது. இன்னும் பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.