ராமநாதபுரம் புதுமடம் கடற்கரை கிராமத்தில் கண்டறியப்பட்ட அரிய வகை ஆழி கழுகுகள், உயர் அழுத்த மின் கோபுரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.


புராணங்களில் கருடன் என சொல்லப்படும் 'ஆழி கழுகு' பாற்கடலில் துயிலும் பெருமாளின் வாகனமாக கருதப்படுகிறது. காலப்போக்கில் மக்கள், செம் பருந்து இனத்தை கருடன் என சொல்ல ஆரம்பித்து விட்டனர். ஆனால், இந்த ஆழி கழுகுகள் தான் கடல் பாம்புகளையும், பெரிய மீன்களையும் பிடித்து சாப்பிட்டு உயிர் வாழுகின்றன.


இனப்பெருக்க காலங்களில் இவை இணையாகவும், மற்ற காலங்களில் தனியாகவும் வாழும். வேறு பறவைகள் சீண்டிப் பார்த்தால் அவைகளை கடுமையாக தாக்கும். மக்களை விட்டு தள்ளி அமைதியாக வாழக்கூடிய கழுகு இனமாக இந்த பறவைகள் கருதப்படுகிறது. பெரும்பாலும் பெரிய நிலப்பரப்பில் கடற்கரை ஓரங்களில் இவைகள் வசிக்கின்றன.


கடந்த 2022ம் நவம்பரில் மதுரையை சேர்ந்த பறவையியல் ஆர்வலர்கள் ரவீந்திரன் நடராஜன், பைஜூ ஆகியோர் தலைமையிலான குழுவினர், ராமநாதபுரம் புதுமடம் கடற்கரைப்பகுதியில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது இந்த பறவைகள் இனப்பெருக்கத்தை ராமநாதபுரம் புதுமடம் பகுதியில் கண்டறிந்தனர். இவர்கள் கண்டறிந்த பறவைகளும், அதன் இனப்பெருக்கம் ஆய்வுகளும், சர்வதேச அறிவியல் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் ஜர்னல் ஆஃப் த்ரெட்டன்டு டாக்ஸா ( Journal of threatened Taxa) வெளியிட்டுள்ளது.




இதுகுறித்து பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறுகையில், ''ராமநாதபுரம் மீனவ கிராமங்களுக்கு சென்று இருந்த போது, புதுமடம் பகுதியில் ஒரு உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஒரு பெரிய பறவையின் கூடு பார்த்தோம். பெரிய கூடாக இருக்கிறதே எந்த பறவையாக இருக்கும் என நெருங்கிப் போய் பார்த்தோம். பெரும்பாலும் கழுகுகளும், ஒரு சில நாரைகளுமே இதுபோன்ற பெரிய கூடுகளை கட்டும். அடுத்த 100 அடிக்குள் மற்றொரு மின் கோபுரத்தில் இதுபோல் மீண்டும் ஒரு பெரிய கூடு இருந்தது. நெருங்கி சென்று ஆய்வு செய்த போது, ஆழி கழுகு பறவைகளின் கூடு என்பதை உறுதி செய்தோம். மேற்கு கடற்கரையில் குஜராத்தில் ஆரம்பித்து கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், பங்களாதேஷ், தென் கிழக்காசிய தீவுகளில், ஆஸ்திரேலியா வரை இந்த பறவை இனம் காணப்படுகிறது. இந்த பறவையின் கூடுகள் மிக அரிதாகவே காணப்படும். இந்த கழுகுகள் பற்றிய ஆவணப்படுத்தப்பட்ட கட்டுரைகள், சர்வதேச அளவிலே குறைவாகவே உள்ளன.


வனத்துறை பணியாளர்கள், ஆய்வு மாணவர்கள் உதவியுடன் கூடு அமைந்துள்ள பகுதியை கடந்த நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆய்வு மேற்கொண்டோம். மொத்தம் அப்பகுதியில் நான்கு மின் கோபுரங்களில் இந்த பறவைகளின் கூடுகள் இருந்ததை கண்டறிந்தோம். சில நேரங்களில் பறவைகள் இதுபோல் ஒன்றிற்கு மேற்பட்ட கூடுகளை கட்டி, பார்ப்போரை குழப்பமடை செய்யும். ஆனால், அதில் ஏதாவது ஒரு கூட்டில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த வகையிலே, இந்த பறவையினமும், புதுமடம் பகுதியில் தான் கட்டிய நான்கு கூட்டில் ஒரு ஒன்றில் மட்டுமே இனப்பெருக்கம் செய்தது. நாங்கள் நேரடியாக முதல் முறையாக அங்கு இந்த பறவைகளை பார்த்தபோது கூடுகளை சீரமைக்கிற வேலையை பார்த்தது. இலை, தலைகளை ஒடிந்து வந்து கூட்டிற்குள் வைத்தது. அப்போது முட்டையிடவில்லை.


மனிதர்கள் எளிதில் ஏற முடியாத பாதுகாப்பான இடத்திற்காகவே இந்த பறவைகள் உயரமான மின்கோபுரத்தை கூடுகள் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கிறது. மின் கோபுரத்தில் கூடுகள் கட்டுவதால் நிறைய ஆபத்துகளும் உள்ளன. உயரெழுத்த மின்சாரம் பாய்ந்து இந்த பறவைகள் அதில் அடிப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற கழுகினங்கள் ஒன்று, இரண்டு முட்டைகள்தான் இட்டு அடை காக்கும். அதில் ஒன்றுதான் உயிர் தப்பி வாழும். அடை காக்கும் காலத்தில் பெண் பறவை, அதன் கூட்டில் அடை காக்கும். ஆன் பறவைதான் இரை தேடி எடுத்து வரும். கூட்டிற்கும் காவல் காக்கும். 30 நாட்கள் கழித்து முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவரும்.




குஞ்சுகள் கூட்டிற்குள் இருக்கும் போது ஆண், பெண் பறவைகள் கூட்டிற்கு மேல் பறக்கும். அந்த பகுதிக்குள் வேறு எந்த பறவைகளையும் அனுமதிக்காது. இது போன்ற நேரங்களில் , அப்பகுதிகளில் மற்ற பறவைகளின் இரை தேடுதலுக்கு தடையாக இருக்கும். சில சமயங்களில் இந்த ஆழி கழுகு பறவைகள் வானத்தில் உயரத்தில் பறக்கும் போது மற்ற பறவைகள், இந்த பறவைகளின் குஞ்சுகள் உள்ள கூட்டை தாக்க முயற்சிக்கும். அப்போது அந்த கழுகு பறவைகள் வானத்தில் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கீழே உடனடியாக வந்து மற்ற பறவைகளை துரத்துகிற காட்சி புல்லரிக்கக் கூடிய விஷயமாக இருக்கும்.


இந்த பறவைகளின் பெற்றோர் பாதுகாத்து அரவணைப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. கூட்டிற்குள் குஞ்சுகள் இருக்கும்பாது ஆண், பெண் பறவைகள், ஒரே மாதிரியாக சீராக வானத்தில் பறந்து தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு கூடு இருக்கிற பகுதிகளை சுற்றி சுற்றி தங்கள் எல்லையை மற்ற பறவைகளுக்கு உணர்த்தும். இதை அருமையான நிகழ்வாக எங்கள் ஆய்வில் பதிவு செய்தோம்.


அதிலே ஆண் பறவை இரை தேட செல்கிறது. காலை 8 மணிக்குள் முதல் உணவாக மீன்களை, இறால் வகைகளை பிடித்து வந்து குஞ்சுகளுக்கு கொடுக்கின்றன. அடுத்த உணவு பெரும்பாலும் மாலை வேளையில் தான் கொண்டு வந்து கொடுக்கிறது. வெயில் அதிகமாக இருக்கிற காலத்தில் கூட்டிலே பெண் பறவை இருந்து குஞ்சுகளுக்கு நிழல் கொடுக்கின்றன. ஆண் பறவை, கோபுரத்தின் உச்சியில் இருந்து, வேறு பறவைகள் வந்தால் அவற்றை துரத்துகிற வேலையைப் பார்க்கின்றன.


உயர்ந்த மரங்களில் கூடுகள் கட்டிக் கொண்டு இருந்த பறவையினங்கள் இப்போது இது போன்ற அபாயகரமான மின் கோபுரங்களை தேர்வு செய்வது நம்முன் பல கேள்விகளை எழுப்புகிறது. ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள உயர்ந்த பனை தென்னை போன்ற மரங்கள் அதிகமாக மனிதர்களின் பயன்பாட்டில் மாறிப் போக , வேறு வகை பெரிய மரங்களும் இல்லாத நிலைக்கு போய் விட்டது. இதனாலேயே இப்பறவைகள் மரங்களில் கூடுகள் கட்டுவதை தவிர்த்து மின் கோபுரங்களை தேர்வு செய்கின்றனவோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. "பறவைகளின் இயல்பும், எண்ணிக்கையும் மாறுவது சூழலில் நிகழும் மாற்றங்களின் எதிரொலி என்பார்கள். பல்வேறு மரங்களை தேசமெங்கும் நடுவது ஒன்றே காலமாற்றத்தின் இன்றைய தேவை ஆகும். இல்லையெனில் அரிய வகை பல்லுயிர்களை பார்க்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்" என்றார்.