காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இதனிடையே செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டு இருந்தார். ஊராட்சி மன்றத்தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

 



 

சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தலின் போது தான் அதிகமான சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் விசித்திரமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தல், பிராச்சாரம் போன்றவை நடை யெறுவது வழக்கம். இதனால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளை மிகுந்த கவனத்தோடு கொரோனா பரவலுக்கு மத்தியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உற்று நோக்கி வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கடந்த 15ஆம் தேதி முதல் மிகுந்த ஆர்வத்துடன் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.



 

இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்திலுள்ள களப்பாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் சிவசங்கரி என்பவர் சுயேட்சையாக பேட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்று அவர் சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் உடன் வந்திருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதியைச் சுற்றி 100 மீட்டருக்கு கூட்டம் கூட அனுமதி இல்லை எனக் கூறியதால் சிவசங்கரியின் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர். பின்னர் வேட்பாளர் சிவசங்கரி மற்றும் அவருடைய உறவினர்கள் இரண்டு பேர் மட்டும் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கட்சி சார்பில்லாத ஒரு பெண் சுயேச்சை வேட்பாளர் இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.