நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (37) செங்குளம் அருகே குளக்கரையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் தலையை வெட்டி கொலை செய்யப்பட்டார். துண்டிக்கப்பட்ட தலையை சங்கர சுப்பிரமணியன் என்பவரின் சமாதியில் வைத்துவிட்டு சென்றது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முன்னீர்பள்ளம் போலீசார் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தநிலையில் இக்கொலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூம். இவருடைய மகன் அப்துல் காதர் (வயது 27). இவர் தற்போது பாளையங்கோட்டை சங்கர் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்துல் காதர் பாளையங்கோட்டை மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள ஒரு இடத்தில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அப்துல் காதரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். நெல்லையில் அடுத்தடுத்து 5 கொலைகள் நடந்ததை தொடர்ந்து கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுடன் தென் மண்டல ஐ.ஜி. அன்பு ஆலோசனை நடத்தினார். குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
நெல்லை அருகே உள்ள கீழச்செவல் நயினார்குளத்தை சேர்ந்த சங்கர சுப்பிரமணியன், கோபாலசமுத்திரத்தை சேர்ந்த மாரியப்பன், பாளையங்கோட்டையை சேர்ந்த அப்துல் காதர், அம்பை பிரம்மதேசம் தங்கபாண்டி, களக்காடு நெடுவிளை பொன்னுத்துரை ஆகிய 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதனால் நெல்லை மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை ஐ.ஜி. அன்பு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குற்றம் செய்த நபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். சிலர் தேடப்பட்டு வருகிறார்கள். மேலும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது. சமத்துவமாக, சமாதானமாக இருக்கும்படி அங்குள்ள மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் கிராம மக்கள் மத்தியில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முயற்சி மேற்கொண்டுள்ளார். அவர் கிராமம், கிராமமாக சென்று அங்குள்ள மக்களை ஓரிடத்தில் திரட்டி அறிவுரை வழங்கியுள்ளார். நேற்று பிற்பகலில் கோபாலசமுத்திரம், கொத்தன்குளம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று மோதல் போக்கை கைவிட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என கிராம மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.