தேங்காய்பட்டணம் அருகே வரதட்சணை கொடுமையால் ரயில் முன்பு பாய்ந்து இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் மற்றும் அவரது தம்பிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட் தீர்பளித்தது.

 

தேங்காய்பட்டணத்தை அடுத்த வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் அஜிதா(30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அஜிதாவுக்கு 38 பவுன் நகையும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களும் 7 பவுன் தங்கச்சங்கிலியும் மாப்பிள்ளை ஜெஸ்டின்சனுக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு  இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்சன் சாமுவேலுக்கு கல்லூரியில் பேராசியர் பணிக்காக 3 லட்சம் ரூபாய் தேவைபட்டது.

 





இதற்காக அஜிதாவிடம் கூடுதல் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதா கடந்த 2012 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி கணவர் வீட்டில் இருந்து தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு மதியம் 12.30 மணியளவில் கன்னங்கோடு என்ற வழியாக செல்லும் ரயில்வே ட்ராக்கில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அஜிதாவின் பெற்றோர் புதுக்கடை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மொத்தம் 33 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அஜிதாவின் கணவர் ஜெஸ்டின்சன் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவருக்கும் தற்கொலைக்கு தூண்டியதாக பத்து ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கேட்டதற்காக இரண்டு ஆண்டும், அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்காக இரண்டு ஆண்டும் என மொத்தம் 14 ஆண்டு சிறைத்தண்டனையும்,15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.

 

 



 


கன்னியாகுமரி அருகே சுற்றுலா வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் வேகமாக மோதிய பதைபதைக்கும் சிசி டிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பள்ளிக் குழந்தைகள் இல்லாத நிலையில் சுற்றுலா வாகனத்தில் வந்த 7 சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.

 



 

 

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியில் புனித ஜோசப் கலாசன்ஸ் என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனம் மாணவ, மாணவிகளை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு பள்ளிக்கு அதி வேகமாக வந்த போது எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் இரண்டு வேன்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தன. இதில் மகாராஷ்டராவில் இருந்து கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் 18 பேரில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விபத்திற்கான சிசிடிவி பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.