கடந்த 8- ந்தேதி நெல்லை அரசு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 370 கோடி ரூபாய் மதிப்பில்  நெல்லை மேற்கு புறவழிச் சாலை திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான நில எடுப்பு பணி நடந்து வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை - கன்னியாகுமரி சாலையில் நெல்லை ஜோதிபுரம் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் திட்டம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது, தமிழக முதல்வர் நெல்லை வரும் பொழுது, மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்  மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணியை அறிவித்தார். முதல்வர் அறிவிப்பைத் தொடர்ந்து  இந்த திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து  நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


 




நெல்லை  தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் தாழையூத்தில் தொடங்கி பொன்னாக்குடி வரை சென்று முடியும் வகையில் மேற்குப் புறவழிச் சாலை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதில் சங்கரன்கோவில், தென்காசி, பொட்டல்புதூர், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 மாநில நெடுஞ்சாலைகள் இணைக்கப்படுகிறது. மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த மேற்கு புறவழிச் சாலை திட்டத்திற்காக ரூபாய் 370 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புறவழிச்சாலையின் மொத்த நீளம் 33.2 கிலோமீட்டர். அகலம் தற்போது 12 மீட்டர். இது 14 கிராமங்கள் உள்ளடங்கிய ஒரு திட்டம்..




இந்தத் திட்ட பணிகளுக்காக  92.24 ஹெக்டர் நிலம் கையகப்படுத்த உள்ளது. மொத்தமுள்ள 14 கிராமங்களில் 2 கிராமங்களில் முற்றிலும் நிலம் மாற்றம் மட்டுமே, நில எடுப்பு என்பது இல்லை. 9 கிராமங்களில் தற்போது 30 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்களே அதிக அளவில் கையகப்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்குள் நில எடுப்பு பணி முடிவடைந்து சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும், திட்டப்பணிகள் முழுமையாக இரண்டு ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையின் குறுக்கே பச்சை ஆற்றின் மேல் ஒரு பாலம் மற்றும் இரண்டு ரெயில்வே மேம்பாலங்கள் அமைகிறது, என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண