தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது, கோமாரி நோய் ஏற்பட்டால் பிளவுபட்ட குளம்புகள் கொண்ட கால்நடைகளை தாக்கி பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும், எனவே 2025 ஆம் ஆண்டுக்குள் கோமாரி நோயை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் கோமாரி நோய் தடுப்பூசி இயக்கம் செயல்பட்டு வருகிறது, ஆண்டிற்கு இரண்டு முறை கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்கு போடப்படும், அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நெல்லை மாவட்டத்தில் இன்று தொடங்கியது,




பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் முத்தூர் ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஊராட்சிமன்றத் தலைவர் சுடலைக்கண்ணு தொடங்கி வைத்தார், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 747 பசுக்கள் மற்றும் 4311 எருமைகள் என மொத்தம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 58 கால் நடைகளுக்கு இன்று முதல் தடுப்பூசிகள் போடப்பட உள்ளது, இந்த பணிகளை கண்காணிக்க கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, எனவே இத்திட்டத்தை பயன்படுத்தி கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமங்களுக்கு தடுப்பூசி போடும் குழுக்கள் வரும் போது தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி அளித்து நோய் தாக்காமல் தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு  உள்ளது,




கோமாரி நோய் :


கோமாரி நோய் என்பது ஒரு தொற்று நோயாகும். இந்த நோயை கரணை நோய், குளம்பு வாய் நோய் என்றும் கூறுவர், இந்த நோய் பிளவு பட்ட குளம்பு உள்ள அனைத்து விலங்குகளையும் தாக்குகின்றது. ஆடுகளை விட, மாடுகள் மற்றும் பன்றிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்த  நோய் மாடுகளை தாக்கும் கொடிய நச்சுயிரி ஆகும், இதனால் பாதிக்கப்பட்ட  மாடுகள் வாய், கால், மற்றும் மடியில் கொப்பளங்கள் தோன்றும், கறவை மாடுகளில் திடீரென பால் உற்பத்தி குறைவு ஏற்படும், பால் குடிக்கும் கன்றுகள் இறந்து விடுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்,


இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை இதர மாடுகளிடமிருந்து தனியே கட்டி பராமரித்தல், பாதிக்கப்பட்ட மாடுகளின் கால் மற்றும் வாய்ப்பகுதியை 1% பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலைக் கொண்டு ஒரு நாளைக்கு 3-4 முறை கழுவுதல், புண்களின் மீது கிளிசரின் தடவுதல் போன்றவை முதலுதவிகளை கால் நடைகளுக்கு செய்யலாம்,  கால் நடைகளுக்கு இந்த நோய் வராமல் தடுக்க நோய் வருவதற்கு முன்பே கோமாரி நோய் தடுப்பூசியை ஆண்டுக்கு இரு முறை போட வேண்டும். பண்ணையிலிருக்கும் மாடுகளுக்கு கோமாரி நோய்க்கான முதல் தடுப்பூசியினை மூன்றாம் மாத வயதிலும், இரண்டாம் தடுப்பூசியினை முதல் தடுப்பூசி கொடுத்து 30 நாள் கழித்தும் கொடுக்கவேண்டும். பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஏப்ரல்- மே மாதம் தடுப்பூசியினை தொடர்ந்து அளிக்கவேண்டும். ஒரு பகுதியிலிருக்கும் அல்லது ஒரு கிராமத்திலிருக்கும் அனைத்து மாடுகளுக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி கொடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் கோமாரி நோயை முற்றிலும் ஒழிக்க  முடியும் என்கின்றனர்.