தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக 97 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.




தூத்துக்குடியில் எட்டையாபுரம் சாலையில் உள்ள உப்பாற்று ஓடையை தூர்வாரும் பணியினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 7ஆம் தேதி தொடங்கி வைத்தார். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மழைக்காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரஹமத் நகர், ஆதிபராசக்தி நகர், குறிஞ்சி நகர் போன்ற பகுதிகளில் மழை நீர் தேங்கும் நிலை உள்ளது. புதூர் பாண்டியாபுரம், சங்கரப்பேரி போன்ற இடங்களில் இருந்து வரும் தண்ணீர் உட்புகுவதால் பிரச்னை ஏற்பட்டது. இதற்கு தீர்வாக உப்பாறு ஓடையை தூர்வாரி தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுத்துக் கடலுக்குச் செல்லும் வகையில் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த கால்வாய் படுகிறது. ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றப்படும் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்த பணி நடைபெறுகிறது.




தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகளை உள்ள வடிகால்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சீரமைத்து தூர்வாரி தயார்படுத்தி உள்ளது. தாழ்வான பகுதிகளில் மோட்டார் பம்பு மூலம் தண்ணீரை வெளியேற்ற தேவையான மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வாங்கப்பட்ட மோட்டார் பம்புகள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை வெளியேற்ற தேவையான குழாய்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.




தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக 97 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் மட்டும் 17 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் ஜெனரேட்டர் வசதி, குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக 36 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை கண்காணிக்க அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் அரசுடன் இணைந்து பணியாற்ற 3000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 400 பேருக்கு பேரிடர் மீட்பு குறித்து குறித்த அவசரகால சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே மாவட்டத்தில் மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது” என்றார்.


தூத்துக்குடி மாநகரில் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யாத நிலை உள்ளது. வரும் நாட்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்தால் தான் அரசின் முன்னேற்பாடுகள் சரிவர தெரிய முடியும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.