தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53.40 கோடியில் நடைபெற்று வரும் பழைய பேருந்து நிலைய பணிகள், சிதம்பர நகர் பகுதியில் ரூ.14.96 கோடியில் நடைபெற்று வரும் வணிக வளாக பணிகள் மற்றும் ரூ.22.60 கோடியில் நடைபெற்று வரும் விவிடி சாலை (ஸ்மார்ட் சாலை) பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேருந்து நிலையம் மற்றும் சிதம்பர நகர் வணிக வளாகம் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த பணிகளை தற்போது ஆய்வு செய்துள்ளோம். வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் பணிகளை முடித்துவிடுவதாக ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மார்ச் தொடக்கத்தில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் சிதம்பர நகர் வணிக வளாகம் ஆகியவை திறக்கப்படும்.
பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் மூலமே வழங்கப்படும். ஏற்கனவே இங்கு கடை வைத்திருந்தவர்களும் அதில் பங்கேற்று கடைகளை எடுக்கலாம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. பேருந்து நிலைய வாகன காப்பகமும் டெண்டர் மூலம் தனியாரிடம் கொடுக்கப்படும். அதில் தவறுகள் நடைபெறாமல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முடித்துவிடுவதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தூத்துக்குடியில் நாளை ஆய்வு செய்யவுள்ளார். எனவே, பணிகளை துரிதப்படுத்தி மார்ச் மாதத்துக்குள் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் முடித்துவிடுவோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து 10 மாநகராட்சிகளிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த குழுவினர் அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை வந்ததும் தவறு நடைபெற்றிருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்* தமிழகத்தில் 10 மாநகராட்சிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். அவ்வாறு முடித்தால் தான் மத்திய அரசிடம் இருந்து பணம் வரும். எனவை, ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, மாவட்ட ஆட்சியர்செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாநகராட்சி ஆணையர்சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருச்செந்தூரில் அதிகாலையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் உள்ள பாதாள சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலையம், ஆவுடையார்குளம், மறுகால் ஓடை மற்றும் மாட்டுத்தாவணிப்பகுதியில் கட்டப்பட்டு வரும் நகராட்சி கட்டுமானப் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருச்செந்தூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் 4200 இணைப்புகள் வழங்க வேண்டிய நிலையில், இதுவரையில் 300 இணைப்புகளே வழங்கப்பட்டுள்ளது. முழு இணைப்புகளும் வழங்கினால் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே அடுத்த 2 மாதங்களில் அனைத்து இணைப்புகளும் வழங்கப்பட்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, மறுகால் ஓடையில் விடப்படும். திருச்செந்தூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் எல்லப்பநாயக்கன்குளம் மற்றும் ஆவுடையார்குளம் ஆகிய இரண்டு குளங்களையும் சீரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிப் பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் அதிகப்படுத்தப்படும். பகத்சிங் பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக எரிதகன மேடை இடமாற்றம் செய்யப்படும். திருச்செந்தூர் நகராட்சிக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் திருச்செந்தூரில் ஆய்வு நடத்த உள்ளனர்” என்றார்.