முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல இருப்பதை தொடர்ந்து படுக்கையறை, சமையலறை வசதியுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரி வந்துள்ளது.  சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டதிற்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். நாளை மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். நடை பயணத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பந்தலுக்கு நடந்தே செல்கிறார். சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டதிற்காக மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.



 

அதன் பிறகு அவர் நடை பயணத்தை தொடங்குகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் தங்குகிறார். ராகுல் காந்தியும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிவறை மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட குளுகுளு வசதியுடன் கூடிய கேரவன்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 60 கேரவன்கள் கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்திற்கு வந்துள்ளது. இந்த 60 கேரவன்களும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கேரவன்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை செல்லும் போது அவர்களை பின் தொடர்ந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.