கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன், அவருக்கு சொந்தமாக லாரி கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜாக்கமங்கலம் அருகே தெக்குறிச்சி என்னும் பகுதியில் உள்ள தும்பு ஆலையில் பாரம் ஏற்றுவதற்காக நிறுத்தி வைத்திருந்த நிலையில், மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்றனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரவீந்திரனின் உறவினர் ரவீந்திர பிரசாத் மற்றும் ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். 

 




 

 

லாரி கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்து லாரியை கடந்த 4 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான லாரி நாகர்கோவில் அருகே பெயிண்டிங் ஒர்க் ஷாப்பில் நிற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 17 ஆம் தேதி தனிப்படை போலீசார் அங்கு சென்று அங்கிருந்த லாரியை கைப்பற்றி ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் மீட்கப்பட்ட லாரியின் பதிவு எண்ணும் திருடப்பட்ட லாரியின் பதிவு எண்ணும் வேறு வேறாக காணப்பட்டது. மீட்கப்பட்ட லாரியின் எண்ணிற்க்கு உரிய அனைத்து ஆவணங்களும் காணப்பட்டது. இதனால் குழப்பம் அடைந்த காவல்துறையினர், லாரியின் ஆவணங்கள் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறிய சாலை போக்குவரத்து அதிகாரிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 

 



 

2018 ஆம் ஆண்டு ரவிந்திர பிரசாத் மற்றும் டிரைவர் ராதாகிருஷ்ணன் இருவரும் சேர்ந்து கணபதிபுரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராஜேந்திரன் என்பவரின் உதவியுடன் லாரியை திருடியுள்ளனர். பின்னர் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் என்பருக்கு விற்றுள்ளனர். இதில் ஸ்ரீ கிருஷ்ணன் தனது பழைய லாரி ஒன்றின் பதிவு எண்ணை திருடப்பட்ட லாரிக்கு மாற்றியுள்ளார். அதே போன்று லாரியின் என்ஜின் நம்பர் உட்பட அனைத்தையும் பழைய லாரியில் உள்ளது போன்று மாற்றியுள்ளார். இவ்வாறு மாற்றப்பட்ட லாரி கடந்த 4 ஆண்டுகளாக நாகர்கோவில் பகுதியிலும் ராஜாக்கமங்கலம் பகுதியிலும் இயங்கி வந்துள்ளது.

 



 

இச்சம்பவம் தொடர்பாக நம்பர் மாற்ற உதவிய ஒர்க் ஷாப் ஊழியர்கள் ராஜகோபால், கண்ணன், மணிகண்டன் மற்றும் லாரியை கடத்திய ராஜேந்திரன், திருட்டு லாரியை வாங்கி போலி யாக தயார் செய்து இயக்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணன் ஆகிய 5 பேரையும் ராஜாக்கமங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய உளி, என்ஜினில் நம்பர் பொறிக்க பயன்படுத்திய அச்சுகள் உட்பட அனைத்து பொருட்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று பல திருட்டு வாகனங்களுக்கு இந்த கும்பல் இதேப்போன்று போலி பதிவு எண், போலி என்ஜின் எண்களை பொறித்து கொடுத்துள்ளதாவும் தெரிய வந்துள்ளது தொடர்ந்து போலீசார் இது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.