தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளும் 40 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும்  திறக்கப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்று  முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் இன்று முதல் 100 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




1 ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக செயல்பட உள்ளன. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. இன்று மாணவர்கள் வகுப்புகளில் சுகாதாரமான முறையில் அமரும் வகையில் அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.




மாணவர்கள் அமரும் இருக்கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் இன்று முழு அளவில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகள் வருகை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ச மாணவ-மாணவியர்களும்  பள்ளிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அறிவித்த சுழற்சி முறை வகுப்புகள் கிடையாது.




அதனால் தினமும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் வழக்கம் போல உட்கார வைக்கப்படுவார்கள். முன்னதாக அவர்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு கைகள் தூய்மை செய்யப்படுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இன்று அனைத்து பள்ளி ஆசிரியர்கள் குழு ஏற்பாடு செய்யும். அதனால் அனைத்து ஆசிரியர்களும் இன்று தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 




இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், தனியார் மற்றும் அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும்,பகுதி உதவிபெறும், சுயநிதி, மெட்ரிகுலேசன், சிபிஎஸ்ஐ என, மொத்தம் உள்ள  1531  பள்ளிகளும் இன்று திறக்கப்படுகிறது. இதனால், கிட்டத்தட்ட 2 லட்சம் மாணவர்கள் இன்று பள்ளிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க  அரசு வெளியிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.6